இந்தியத் தேர்தல் ஆணையம் (இசிஐ) கடந்த வெள்ளிக்கிழமை மாலை தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்த நிலையில், ஏபிபி நியூஸ், சி-வோட்டருடன் இணைந்து வாக்காளரின் மனநிலையைத் தெரிந்துகொள்வதற்காக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது.
ஏபிபி நெட்வொர்க்-சி வாக்காளர் கணக்கெடுப்பின் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 41 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று திமுக, காங்கிரஸ் மற்றும் பிற காட்சிகள் உள்ளிட்ட யுபிஏ கூட்டணிக்கு 154-162 இடங்கள் கணிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இம்முறை திமுக நிச்சயம் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கணக்கெடுப்பின்படி, அதிமுக, பாஜக மற்றும் பிற கட்சிகள் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி, சுமார் 28.6 சதவிகித வாக்குகளைப் பெற்று 58-66 இடங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், எம்.என்.எம் 2-6 இடங்களையும், ஏ.எம்.எம்.கே 1-5 மற்றும் மற்ற கட்சியினர் 5-9 இடங்களையும் கொண்டு முறையே 8.3 சதவிகிதம், 6.9 சதவிகிதம் மற்றும் 14.8 சதவிகித வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் (எம்.என்.எம்) நிறுவனர் கமல்ஹாசனுக்கு, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மிக முக்கிய அரசியல் பயணமாக இருக்கும்.
2016-ம் ஆண்டில், அதிமுக, பாஜக மற்றும் பிற கட்சிகள் உள்ளடக்கிய என்.டி.ஏ கூட்டணி 234 இடங்களில் 136 இடங்களை 43.7% வாக்குகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதான போட்டியாளரான திமுக-காங்கிரஸ் கூட்டணி, 39.4% வாக்குகளுடன் 98 இடங்களைப் பெற்றது. அதேபோல காங்கிரஸ் போட்டியிட்ட 41 இடங்களில் 8 இடங்களைப் பெற முடிந்தது.
தமிழக சட்டசபையின் 234 உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் 2021 மே 24-ம் தேதியுடன் முடிவடையும். இந்த காலக்கெடு முடிவதற்கு முன்னர், ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டத்தில் நடத்துவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவு மே 2-ம் தேதி அறிவிக்கப்படும்.
பிப்ரவரி 26-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, தேர்தல் நடத்தை விதிமுறை மாதிரி தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது. கொரோனா வைரஸ் நிலைமையை மனதில் கொண்டு, வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை ஆன்லைனில் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், கூடுதல் மணிநேரமும் அனுமதிக்கப்படும். வாக்காளர் பதிவேட்டில் கையொப்பமிடவும் வாக்களிக்க ஈ.வி.எம் பட்டனை அழுத்தவும் பாதுகாப்பாக இருக்க வாக்காளருக்குக் கையுறைகள் வழங்கப்படும்
source : https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-to-win-for-sure-abp-news-c-voter-opinion-poll-tamil-nadu-elections-2021-tamil-news-249981/