செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோல்வி; முதல்வர் நாராயணசாமி ராஜினாமா

 புதுச்சேரி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, புதுச்சேரி சட்டப்பேரவையைவிட்டு வெளியேறிய முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் ஆட்சியைக் கலைக்க கோரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி செய்து வந்தது. முதல்வர் நாராயணசாமிக்கும் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வந்தது. இதனைத்தொடர்ந்து, அண்மையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை பதவியில் இருந்து நீக்கி குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவித்தார்.

இதனிடையே, புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். முன்னதாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ தனவேல் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால், புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது அதனால் முதல்வர் நாராயணசாமி அரசு புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிப்ரவரி 22ம் தேதி முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அறிவித்தார்.

நேற்று புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணனும் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசனும் ராஜினாமா செய்தனர். இதனால், புதுச்சேரி சட்டப்பேரவயில் காங்கிரஸ் – திமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக இன்று புதுச்சேரி சட்டப் பேரவை கூடியது. பேரவைக் கூடியதும், முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். பின்னர், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீது முதல்வர் நாராயணசாமி பேசினார். அப்போது, “மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன். கடந்த ஆட்சி செய்யத் தவறிய திட்டங்களை நாங்கள் நிறைவேற்றினோம். கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்பட்டது. மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. கிரண்பேடி அளித்த நெருக்கடியை கடந்தும் ஆட்சியை நிறைவு செய்துள்ளோம்.மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வந்தது. மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம்தான் ஆனால் புதுச்சேரியின் பொருளாதார வளர்ச்சி 10.20 சதவீதம். ” என்று கூறினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடி 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அறிவித்த பணமதிப்பிழப்பு அறிவிப்பை விமர்சித்துப் பேசினார். அதனால், கருப்பு பணம் வெளியே கொண்டுவரப்படவில்லை என்று கூறினார். மேலும், பல திட்டங்களை நிறைவேற்றுவதில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருந்ததாக சாடினார்.

“மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை செயல்படவிடாமல் தடுப்பது ஏன்? எதிர்ப்பை காட்டினால் அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகிறது மத்திய அரசு” என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.

அப்போது, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் நாராயணசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி, சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அவருடன் அமைச்சர்களும் வெளியேறினார்கள்.

இதையடுத்து, புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதையடுத்து, பெரும்பான்மை இழந்ததாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

ராஜினாமா கடிதம் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்குதான் வாக்களிக்க உரிமை உண்டு என்று சட்டமன்றத்தில் சொன்ன கருத்தை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத காரணதால், நாங்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து துணை நிலை ஆளுநரிடம் எங்களுடைய அமைசரவை ராஜினாமா செய்கிறோம் என்று நானும் எங்களுடைய அமைச்சர்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், திமுக எம்.எல்.ஏ.க்களும், சுயேட்சை எம்.எல்.ஏ-வும் எங்களுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம்.” என்று கூறினார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் என்.ரங்கசாமி, “புதுச்சேரி சட்டமன்றத்தில் அரசால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் படுதோல்வியடைந்தது. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது பேசிய முதல்வர் நாராயணசாமி தனது அரசு அவர் ஆண்ட காலங்களில் தனது சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டதைப் பற்றி கூறாமல் மத்திய அரசைப் பற்றி குறை சொல்லை பேசியுள்ளார். எங்களுடைய கேள்வி நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிருபிக்கத் தவறியதால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதையடுத்து, முதல்வர் நாரயாணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

source https://tamil.indianexpress.com/india/puducherry-floor-test-congress-govt-loses-majority-cm-v-narayanasamy-resigned-248812/