வியாழன், 25 பிப்ரவரி, 2021

புதுவையில் பாஜக வகுத்த அரசியல் வியூகம்: அறிந்து கொள்ள வேண்டிய 5 விசயங்கள் என்ன?

 திங்கள் கிழமை அன்று, தென்னிந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் கீழ் செயல்பட்ட ஒரே மாநில அரசான நாராயணசாமியின் அரசு புதுவையில் கவிழ்க்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக எம்.எல்.ஏக்களின் தொடர் ராஜினாமா இந்த மாற்றத்திற்கு வழி வகுத்தது. தன்னுடைய ராஜினாமாவை சமர்பிப்பதற்கு முன்பு, அவருடைய ஆட்சி பாஜகவின் தந்திரங்களால் கவிழ்க்கப்பட்டது என்று கூறினார்.

ஆனால் இன்னும் பாஜக வேர் விடாத யூனியன் பிரதேசத்தில் பாஜக என்ன மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது? மேலும் இதில் மூன்றே மூன்று பரிந்துரைக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர்.  என். ஆர். காங்கிரஸ் மற்றும் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக ஏன் சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக இப்படியான சூழலை அனுமதித்தது?

புதுச்சேரியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பாஜக மகிழ்ச்சி அடைய காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1. காங்கிரஸ் – முக்த் பாரத் ஆட்சிக்கு வந்த போது, பாஜக தன்னுடைய நோக்கங்களை அறிவித்திருந்தது. காங்கிரஸையும் அதன் தலைவரையும் மோசமான நிலையில் வெளிச்சப்படுத்தும் பணியில் ஈடுபட்டது.

எதிர்க்கட்சியின் இழப்புகள் : மத்தியபிரதேசம், கோவா, மணிப்பூர் அல்லது அருணாச்சலபிரதேசம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி செய்யவும், மக்களை ஒன்றாக வைத்திருக்கவும் முடியாத கட்சி என்று நிறுவியுள்ளது. மேலும் அக்கட்சியின் சித்தாந்தங்கள் இனிமேல் நாட்டுக்கு தேவைப்படாது என்று பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.

புதுச்சேரியில் நடைபெற்றது அதனோடு சேர்ந்த ஒரு நிகழ்வாகும். பாஜக தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கப் போவதில்லை. இருப்பினும் நாடுமுழுவதும் பாஜக கட்டி வரும் விவரணையை வலுப்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் பாஜகவின் செயல்பாட்டினை நன்றாக அறிந்து வரும் மூத்த பாஜக தலைவர் கூறியுள்ளார். “தேர்தலுக்கு முன்பு இது நடைபெற்றிருப்பதால் யாரும் பாஜக அதிகாரத்திற்காக நடந்து கொள்கிறது என்று கூற முடியாது. மாறாக அவர்களின் கவனம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.


2. தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும் பாஜகவிற்கு ஆதரவாகவே அமையும். ஏன் என்றால் ராஜினாமா செய்த 5 எம்.எல்.ஏக்களில் மூவர் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டனர். மீதம் இருக்கும் இருவரும் பாஜகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். அல்லது அவர்கள் சுயேச்சையாக போட்டியிடலாம் என்று தலைவர் ஒருவர் கூறினார். இது காங்கிரஸ் கட்சியை மேலும் புதுவையில் வலுவிழக்க செய்யும். அது கூட்டணியில் இருக்கும் திமுகவிற்கும் ஆதரவாக போய் முடியும். எனவே காங்கிரஸ் கீழ் ஆட்சிக்கான வாய்ப்புகள் குறையும் என்று சிலர் கூறுகின்றனர்.

3. நாராயணசாமியின் அரசு பலவீனம் அடைந்தது. காங்கிரஸ் தலைமை புதுச்சேரி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்களுடன் வெகுநாட்கள் தொடர்பில் இருந்ததாக பாஜகவினர் கூறுகின்றனர். அவர்கள் நினைத்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சியை கவிழ்த்திருக்கலாம். ஆனால் தேர்தலுக்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர்களின் ஆதரவாளர்கள் மீண்டும் அதே எம்.எல்.ஏக்களை தேர்வு செய்ய வாய்ப்பாக மாறும். “தேர்தல்களுக்கு சற்று முன்னதாக ஒரு கிளர்ச்சி நிகழும்போது, கோபத்தை ஈடுசெய்வது எளிதானது” என்று ஒரு பாஜக தலைவர் கூறினார்.

பொதுத்துறை அமைச்சராக இருந்த நமசிவாயன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது பாஜகவில் இணைந்துவிட்டார். இது அவருடைய வில்லியனூர் தொகுதியில் ஒரு அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது. அவர்களின் பகுதிகளில் இருந்து இந்த தலைவர்கள் பாஜகவிற்காக வாக்குகளை சேர்க்க முடியும் என்று கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.

4. கிரண்பேடி துணை நிலை ஆளுநராக இருந்த போது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க முற்பட்டிருந்தால் அது பாஜகவிற்கும் மத்திய அரசிற்கும் கலங்கமாக அமைந்திருக்கும். “பேடியை பதவியில் இருந்து அகற்றுவதன் மூலம், சேதத்தை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். பேடி இருந்தபோது இது நடந்திருந்தால், கட்சியும் மத்திய அரசும் குற்றம் சாட்டப்பட்டிருக்கும், ”என்று பாஜக அலுவலக பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.

5. கிரண் பேடியின் பதவி நீக்கம் மட்டுமின்றி தமிழிசை சௌந்தரராஜனை துணை நிலை ஆளுநராக அறிவித்ததும் பாஜகவின் திட்டம் தான். இது கட்சி தொடர்பான விமர்சனங்களை மட்டும் தவிர்க்காமல், தமிழர் ஒருவரை துணைநிலை ஆளுநராக வைப்பதால் பாஜகவை உணர்வின் அடிப்படையில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், இந்த நிலையில் ஒரு புதிய அரசாங்கத்தை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நாராயணசாமிக்கு அனுதாபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பாஜக தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். மாநிலத்தில் புதிய அரசாங்கத்திற்கான என் ஆர் காங்கிரஸ் கோரிக்கை தொடர்பாக பாஜக எதையும் இன்னும் தீர்மானிக்கவில்லை.

Source: https://tamil.indianexpress.com/explained/the-bjps-gameplan-in-puducherry-five-key-points-to-note-249257/