Disha Ravi : அவள் வீட்டுக்கு வந்ததும் அவளை கட்டிப்பிடித்துக் கொள்ள காத்திருக்கின்றேன் என்று திஷா ரவியின் தாயார் மஞ்சுளா நஞ்சையா கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை மாலையில் டெல்லி நீதிமன்றத்தில் டூல்கிட் விவகாரத்தில் திஷாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்தியன் எக்ஸ்பிரஸிடம் அவருடைய தாயார் பேசுகையில், இது அனைவருக்கும் கஷ்டமான நேரம் தான். ஆனால் நம்முடைய குழந்தைகள் எந்த விதமான தவறும் செய்யாமல் இருக்கும் போது நாம் ஏன் பயப்பட வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார். நம்முடைய குழந்தைகள் உண்மைக்கும் நீதிக்கும் போராடும் போது அவர்களுக்கு உற்ற துணையாக அருகில் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
பிப்ரவரி 14ம் தேதி அன்று பெங்களூரில் 22 வயதான காலநிலை செயற்பாட்டாளார் திஷா ரவியை கைது செய்தனர் டெல்லி காவல்துறையினர். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த காலநிலை செயற்பாட்டாளார் கிரெட்டா தன்பர்க் பகிர்ந்த டூல்கிட்டை திஷா உருவாக்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டால் அவர் கைது செய்தார்.
நான் இந்த விசயத்தில் சட்ட ரீதியாக திஷாவிற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய நீதித்துறை மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். என்னுடைய மகள் ஏதும் தவறு செய்யவில்லை என்பதால் நான் அவருக்கு பெயில் கிடைக்கும் என்று நான் நம்பினேன் என்றார் மஞ்சுளா. பெங்களூருவில் இருந்து 30 கி.மீ அப்பால் இருக்கும் சிக்கபனவரா பகுதியில் தன்னுடைய நாய்க்குட்டி சாமியுடன் வசித்து வருகிறார் மஞ்சுளா. திஷாவின் அப்பா மைசூரில் விளையாட்டு பயிற்றுநராக இருக்கின்றார். திஷா கைது செய்யப்பட்டதில் இருந்து மஞ்சுளாவுக்கு துணையாக அவர் அங்கே இருக்கிறார்.
உண்மை தான் எப்போதும் வெற்றி பெறும். என்னுடைய மகள் தவறு ஏதும் செய்யாத நிலையில் நான் ஏன் பயப்பட வேண்டும். நம்முடைய விவசாயிகளுக்கும் சமூகத்திற்கும் ஆதரவாக தான் என் மகள் இருந்தார் என்று திஷா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பதில் கூறினார்.
இந்த விசயத்தில் திஷாவின் நண்பர்கள் தான் உற்ற துணையாக எங்களுக்கு இருந்தனர். அவர்களின் ஆதரவு குறித்து என்னால் வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட இயலாது. திஷாவின் நண்பர்கள் கடவுள் கொடுத்த பரிசு என்று மஞ்சுளா கூறினார்.
டெல்லியில் இருந்து திஷா போன் செய்தது குறித்து கேட்ட போது என்னுடைய மகள் மிகவும் நம்பிக்கையாக இருந்தார். நாங்கள் அவருடன் போனில் உரையாடினோம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று அவள் எங்களிடம் கூறினார். எங்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அவர் வழங்கினார். அவருடைய பாதுகாப்பு குறித்து தான் எங்களுக்கு அதிக கவலையாக இருந்தது. நேரத்திற்கு சரியான உணவு உட்கொண்டாரா என்று தான் நாங்கள் கவலைப்பட்டோம். எங்களை விட்டு அவர் எப்போதும் இவ்வளவு தூரம் விலகி இருந்தது இல்லை என்று அவர் கூறினார்.
உலகெங்கிலும் திஷாவிற்கு கிடைத்த ஆதரவு குறித்து பேசிய அவர், அனைவருக்கும் நன்றிகளைக் கூற கடமைப்பட்டுள்ளேன். எங்களின் அண்டை வீட்டார்கள் முதல் கிராமத்தில் இருக்கும் எங்களின் குடும்பத்தினர் வரை அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். “அவள் மிகவும் தைரியம் மிக்கவள். குழந்தைகள் சரியான பாதையில் செல்லும் போது பெற்றோர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
source : https://tamil.indianexpress.com/india/disha-ravi-mother-waiting-to-hug-her-stand-by-our-kids-in-fight-for-justice-249192/