வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

9, 10, 11-ம் வகுப்பு ஆல் பாஸ் அறிவிப்பு

 தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்புத் தேர்வுகளும், பத்து மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு, 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் பள்ளி விடுதிகள் திறக்க அனுமதிக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகின்றன. மேலும், 12ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெறும். இருப்பினும், இதுவரை மாணவர்களுக்கு மாநில வினாத்தாள் மற்றும் வினா வங்கி எதுவும் அரசால் வழங்கப்படவில்லை.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்தண்டும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும்  வழங்கப்பட்டது.

ஆனால், இந்த கல்வியாண்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலாண்டு தேர்வையும், அரையாண்டு தேர்வையும் ( பொதுவாக, டிசம்பர் மாதம் வழக்கமாக நடத்தப்படும் ) ரத்து செய்வதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதன் காரணமாக, எதன் அடிப்படையில் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு வழங்கப்படும்  என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இருக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் மிகவும் அவசியமாகிறது. 10ம் வகுப்பை பொதுத் தேர்வை ஜூன் ஜூலை மாதங்களில் ஒத்தி வைக்கலாம் என்று கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தேர்வை முழுமையாக ரத்து செய்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் இடைவிடாமல் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்யும் நோக்கில் வீடியோ பாடங்கள் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. அரசின் சார்பாக 10 இதர தனியார் தொலைக்காட்சிகளும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ததாகவும் தமிழக அரசு அறிவித்தது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும் என மத்திய கல்வி அமைச்சர் முன்னதாக தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/education-jobs/9th-10th-11th-public-exam-cancel-students-all-pass-cm-edappadi-k-palaniswami-exam-announcement-249415/