திங்கள், 8 பிப்ரவரி, 2021

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு; தமிழக அரசு ஒப்புதல் அளிக்க முடிவு என தகவல்

 அரசுத் துறையில் கல்வி வேலைவாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். பாமக கடந்த 2 மாதங்களாக வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்டர் ராமதாஸ் வன்னியர்களின் இடஒதுக்கீடு கோரிக்கையை ஒப்புக்கொள்பவர்களுடன் தான் கூட்டணி என்று உறுதியாகக் கூறிவிட்டார். அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் தைலாபுரம் சென்று டாக்டர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தனி இடஒதுக்கீடுக்கு பதிலாக, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் பெரும்பகுதியை வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு அளிக்கும் பேச்சுவார்த்தைக்கு பாமக ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியானது.

அதோடு நேற்று முன்தினம் அமைச்சர்கள் சென்னையில் பாமகவின் வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் நேற்று பாமக குழு நடத்திய பேச்சில் உடன்பாடு எட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2012-ம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக சந்தானம் குழு கொடுத்த அறிக்கையின் படி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுக – பாமக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

source: https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-decide-to-approve-for-internal-reservation-for-vanniyars-in-mbc-category-246215/