புதன், 24 பிப்ரவரி, 2021

புதுச்சேரி விவகாரம் : எங்கே சறுக்கியது காங்கிரஸ்?

  புதுவையில் காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்த நிலையில், இதற்கு காரணமாக முதல்வர் நாராயணசாமி மீதும், புதுவையின் நிலைமையை கட்சியின் தலைமை கையாண்ட விதம் குறித்தும் பல்வேறு விசயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.  வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருப்பினும் கட்சி தலைவர்களிடம் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.

காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் தலைமை மற்றும் நாராயணசாமி இருவரும் கட்சியில் அதிருப்தி ஏற்படுத்தும் எம்.எல்.ஏக்கள் குறித்து அதிக நம்பிக்கையையும் குறைந்த மதிப்பீட்டையும் கொண்டிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்திலும், 2019ம் ஆண்டு கர்நாடகாவிலும் ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் நிலை 2018ம் ஆண்டிலேயே நடைபெற துவங்கியது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். தீப்பாய்ந்தன், விஜயவேணி எம்.எல்.ஏக்கள் அன்றைய சபாநாயகர் வைத்திலிங்கத்திடம், அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த 2 எம்.எல்.ஏக்கள் பணத்துடன், கட்சி மாற்றுவதற்காக அணுகினார்கள் என்றும் அதற்கான ஆடியோ ஆதரங்களையும் அவரிடம் சமர்பித்தனர்.

வைத்திலிங்கத்திடம் இது குறித்து தொடர்பு கொண்டு பேசிய போது அதனை ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்ற போதும் முடிவு எட்டப்படவில்லை. அதன் பின்னர் வைத்திலிங்கம் மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். அவரை தொடர்ந்து அவையின் சபாநாயகராக தேர்வான சிவக்கொழுந்து இந்த புகாரை மேற்கொண்டு விசாரிக்கவில்லை என்று கூறினார். அவர்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எங்களுக்கு தெரியும். எங்களின் சில எம்.எல்.ஏக்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சர் நமசிவாயம் உள்ளிட்டோர் அதிருப்தியில் இருந்தனர். ஆனால் அந்த பிரச்சனைகளை நாங்கள் அடையாளப்படுத்தவில்லை என்று புதுவை தலைவர் ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.


”நமசிவாயத்திற்கு முக்கியமான பதவியை தந்தோம். வேறென்ன நாங்கள் தரமுடியும். அவர் முதல்வராக விரும்பியிருந்தால் அதற்கு எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும். தற்போது அவர் பாஜகவில் இணைந்துவிட்டார். பாஜக, அதிமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும். என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என். ரங்கசாமியும் முதல்வராக விரும்புகிறார். அவர் இதற்கு முன்பும் முதல்வராக பொறுப்பு வகித்தார். தற்போது நமசிவாயம் என்ன செய்வார்? மேலும் நமசிவாயத்தின் மாமனர், ரங்கசாமியின் மூத்த சகோதரர் என்று கட்சி தலைவர் ஒருவர் கூறினார்.

இதுவரை சொல்லப்படாதது என்னவென்றால் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் சந்தேகப்பார்வை தற்போது சபாநாயகர் சிவக்கொழுந்துவின் மீது விழுந்தது தான். புகாரை மேற்கொண்டு விசாரிக்காதது மட்டும் அல்ல, கடந்த சில நாட்களாக அவர் நடந்து கொண்ட விதமும் கூட இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது. நாராயணசாமி, மூன்று பரிந்துரை செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று நம்பினார்கள். ஆனால் அது குறித்து சபாநாயகர் அவையில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று தலைவர் ஒருவர் கூறினார்.

இன்னும் சில நாட்களில் சபாநாயகரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்ற கட்சியில் சேர்ந்தால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார். நரேந்திர மோடி பிப்ரவரி 25ம் தேதி அன்று புதுவை வர உள்ளார். அவருடைய வருகையை பெரிய வெற்றியாக கொண்டாட உள்ளனர் என்று மற்றொருவர் கூறினார். கட்சியில் அதிருப்தி இருப்பது குறித்து உயர்க்குழு தலைவர் முன்பே உரையாடியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சி தலைமையும் இதனை எதிர்பார்க்கவில்லை. கட்சிக்குள் சில பிரச்சனைகள் இருப்பதால் ஒருவர் அல்லது இரண்டு நபர்கள் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்று தான் எதிர்பார்த்தோம். மேலும் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்ற நிலையில் அரசு கவிழும் நிலை ஏற்படும் என்று நினைக்கவில்லை என்று அவர்கள் கூறினார்கள். இது எங்களுக்கு ஒரு வகையில் நல்லதாகவே இருக்கிறது. எங்களுக்கு ஆலோசனைகள் நடத்த ஒரு சிறந்த நேரம் கிடைத்துள்ளது. அரசின் செயல்திறனில் மட்டுமே கவனம் செலுத்தி ஆலோசனை நடத்துவோம் என்றார்.

பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்த அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் புதுவை பொறுப்பாளர், பாஜக புதுவையில் ஜனநாயகத்தை படுகொலை செய்ததாக கூறினார். மத்திய அரசும் பாஜகவும் சி.பி.ஐ, ஐ.டி. மற்றும் அமலாக்கத்துறையினர் மூகமாக எங்களின் எம்.எல்.ஏக்களை மிரட்டினார்கள் மற்றும் கட்டாயப்படுத்தினார்கள் என்று அவர் கூறினார். கோடிக்கணக்கில் பணத்தை போட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது. மோடி அரசு மற்றும் துணை நிலை ஆளுநரின் ஒத்துழைப்பு இல்லாமல் கடந்த 5 ஆண்டுகள் மக்களுக்காக எங்களின் அரசு உழைத்தது என்றும் அவர் கூறினார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு பாஜகவின் மாஃபியா அரசியலால் ஸ்திரத்தன்மையை இழந்துள்ளது. மகாராஷ்ட்ரா, கர்நாடகா, ராஜஸ்தான், ம.பி, வடகிழக்கு மாநிலங்களிலும் இதைத்தான் அவர்கள் செய்தனர். தற்போது மேற்கு வங்கத்திலும் அதைத்தான் செய்தார்கள். ஜனநாயகத்தின் மீது அவர்களுக்கு மரியாதை ஏதும் இல்லை. ஆனால் புதுவையில் அப்படியான நிலை ஏற்படாது என்று குண்டு ராவ் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/questions-within-congress-did-high-command-neglect-discontent-248993/