வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

ராணுவ சதிப்புரட்சி: மியான்மரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?

 மியான்மரில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இந்த ராணுவ சதிப்புரட்சி மியான்மரை பலவீனமாக்கும் என்பதோடு, சீனாவுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுபடுத்தும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

திங்கள்கிழமை காலை, மியான்மரின் அரச ஆலோசகராக விளங்கும் ஆங் சான் சூச்சி மற்றும் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பின் (என்.எல்.டி) அநேக உறுப்பினர்களும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில், இராணுவம் ஒரு வருட காலபகுதிக்கு அவசரகால நிலைமையினை பிரகடனப்படுத்தியது. நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும் ராணுவ தளபதி மின் ஆங் ஹ்லேங்-ன் கீழ் வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

திங்களன்று ஆட்சி கவிழ்ப்பதற்கு முன்னர், என்.எல்.டி கட்சி இராணுவத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Covenant Consult எனும் தொழிநுட்ப ஆலோசனை நிறுவனத் தலைவர் டிம் ஷ்ரோடர், டி.டபிள்யு என்று செய்தி நிறுவனத்திடம்  கூறுகையில், “அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்ட பின்பு மியான்மரின் அநேக இடங்களில்  அமைதி நிலவியது. பெரியதொரு எதிர்ப்பும், தெருக்களில் ராணுவ வீரர்கள் நடமாட்டமும் காணப்படவில்லை” என்று தெரிவித்தார்.

“நேற்று, கடைகள் வழக்கம் போல் இயங்கின. சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் காணப்பட்டது. பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக இருந்தது. சமூக ஊடகங்களில் பலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வந்தாலும், இணையங்களில் போலி செய்திகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன” என தெரிவித்தார்.

எது உண்மை, எது பொய் என்பதை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மியான்மர் மக்கள் மாபெரும் போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என என்.எல்.டி அமைப்பு முகநூல் பக்கத்தில் ஆங் சாங் சூச்சி கூறுவதாக உள்ள பதிவிகள் உண்மையானதா? போலியானதா? என்பதில் குழப்பம் நிலவி வருவதாக உள்ளூர் செய்தித்தாள் தெரிவிக்கிறது.

“பல ஆண்டுகளாக சூச்சி போராடிய எல்லாவற்றிற்கும் இத்தகைய பதிவு முரணானது” என போலந்தில் உள்ள ஜாகெல்லோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மியான்மர் நிபுணர் மைக்கேல் லூபினா தெரிவித்தார்.

ராணுவ சதிப்புரட்சி  ஆச்சரியமாக இருந்தது : 

நாட்டின் பெரும்பாலான குடிமக்களுக்கும், மியான்மர் நிபுணர்களுக்கும் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற  ராணுவ சதிப் புரட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த செயல் அரசியலமைப்புக்கு உட்பட்டது என அந்நாட்டு இராணவம் கருதுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற மியான்மர் பொதுத்தேர்தல்களின் முடிவுகள் மோசடியானது என்ற அறிவிப்பை வெளியிட்டு இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆனால், முறைகேடுகள் ஆதாரப்பூர்வமாக நிருபிக்கப்படவில்லை.

2008-ல் இராணுவத்தால் நிறைவேற்றப்பட்ட மியான்மர்  அரசியலமைப்பில் இரண்டு ஷரத்துகள், தேசிய ஒற்றுமை அல்லது இறையாண்மைக்கு அச்சுறுத்தப்பட்டால் ஜனாதிபதி ஒரு வருட அவசரகால நிலையை அறிவிக்க முடியும் என்று குறிப்பிடுகிறது.

தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுடன் (என்.டி.எஸ்.சி) கலந்தாலோசித்த பின்பு அவசரகால நிலைமையிணைப் பிரகடனப்படுத்த வேண்டும்.  இருப்பினும், தற்போது கவுன்சிலிடம்  யார் கோரிக்கையை கொண்டு சென்றது அதிபரா? இல்லை  இராணுவத்தால் நியமிக்கப்பட்ட துணை அதிபரா? என்பது தெளிவாக தெரியவில்லை.

எவ்வறாயினும் தேர்தல் மோசடிகள் (நிரூபிக்கப்பட்டாலும் கூட) தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை  அச்சுறுத்தும் சம்பவமாக பொருள் கொள்ளப்படுமா? என்பதும் விவாதத்திற்குரியது.

குடிமை ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒன்றியத் தேர்தல் ஆணையம் (யு.இ.சி) தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தவறியதால், அவசரகால நிலையை பிரகடனப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சூச்சி கட்சி 83% வாக்குகளுடன்  பெரும்பான்மை பெற்றது. 8 மில்லியன் எண்ணிக்கையில் தகுதியற்ற வாக்காளர்கள் தேர்தலில் மோசடி செய்திருப்பதாக ராணுவம் குற்றம் சாட்டியது.


ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து எனப் பல நாடுகள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன . அண்டை நாடான சீனா மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறது. ராணுவ சதிப்புரட்சியை ‘அமைச்சரவை மாற்றம்’ என்ற அளவில் தான் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர். எனவே, சர்வதேச அழுத்தம் காரணமாக சீனாவை நோக்கி நகரக்கூடிய வாய்ப்பை மியான்மர் ராணுவத்துக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

source https://tamil.indianexpress.com/explained/myanmar-coup-what-is-happening-inside-myanmar-aung-san-suu-kyi-245744/