Who is Rihanna, the superstar who wants focus on farmers : இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச அளவில் முதலில் ஆதரவு தெரிவித்தார் பாப் பாடகி ரிஹானா. அவரைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா, நடிகர் ஜான் குசான், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிஸ், லெபனான் – அமெரிக்க மாடலான மியா கலிஃபா உள்ளிட்டோரும் தங்களின் ஆதரவினை தெரிவித்தனர். 32 வயதான நடிகர்-பாடகரான ரிஹானா தன்னுடைய 101 மில்லியன் ஃபாலோவர்களுக்கு, “ஏன் நாம் இதைப்பற்றி பேசவில்லை? #farmersprotest என்று சி.என்.என். செய்தியை பதிவிட்டு ட்வீட் வெளியிட்டார். காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து, அரசு புதுடெல்லியில் போராட்டம் நடக்கும் இடங்களில் இணையத்தை துண்டித்தது என்ற செய்தியின் தலைப்பை அவர் பகிர்ந்திருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சகம், முன் எப்போதும் இல்லாத வகையில், பிரபலமானவர்களின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டது. அதில் அவர்களின் தகவல்கள் “துல்லியமற்றது அல்லது பொறுப்பற்றது” என்று குறிப்பிட்டிருந்தது.
பல்வேறு முக்கிய பிரச்சனைகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர்
600 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புள்ள ரிஹானா மனிதநேயம், கல்வி மற்றும் கலாச்சாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அல்சைமர்ஸ் அசோசியேசன், எண்டெர்டெய்ன்மெண்ட் இண்டஸ்ட்ரி ஃபவுண்டேசன், டிசைனர்ஸ் அகைய்ன்ஸ்ட் எய்ட்ஸ், ஷ்ரினெர்ஸ் குழந்தைகள் மருத்துவமனை, ஸ்டேண்ட் அப் டூ கேன்சர், ப்ளாக் ஐட் பீஸ் ஃபவுண்டேசன் மற்றும் யுனிசெஃப் உள்ளிட்ட பல்வேறு தொண்டு நிறுவனங்களில் இணைந்து சேவை செய்து வருகிறார். சாண்டி புயல் நிவாரணத்திற்காக 1 லட்சம் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக வழங்கினார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கினார்.
கொரோனா நோய்தொற்றுக்கு முன்பு, ரிஹானா தன்னுடைய தாத்தா பாட்டியின் பெயர்களை கொண்டு உருவாக்கப்பட்ட க்ளாரா லியோனல் அறக்கட்டளை மூலமாக 60 நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வழங்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக கௌரவிக்கப்பட்டார். NAACP இமேஜ் விருதுகள் 2020ல் பங்கேற்ற அவர், அதிபர் விருதினை பெற்றார். “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்தால் என்ன உருவாக்க முடியும் என்று யோசித்துப்பாருங்கள். நாம் தான் இந்த உலகத்தை சரி செய்ய முடியும். தனித்தனியாக நின்று அதனை செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.
2017ம் ஆண்டு அந்த ஆண்டுக்கான ஹார்வர் பல்கலைக்கழகத்தின் மனிதநேய விருதினை பெற்றார். நோபல் பரிசு பெற்ற மலாலா, கைலாஷ், டெஸ்மண்ட் டுடு, மற்றும் ஆங் சாங் சு க்யிக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பார்படோஸில் ரிஹானா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புற்றுநோயியல் மற்றும் நியூக்கிளியர் மருத்துவத்திற்கான மையம் ஒன்றை உருவாக்கியதற்காக அவர் கௌரவிக்கப்பட்டார். 2010ம் ஆண்டில் ஹோப் ஃபார் ஹைத்தி நவ் என்ற பிரச்சாரத்தை ஆதரித்து, நிலநடுக்கத்தால் சிக்கித்தவித்த ஹைத்திக்காக பாடல்கள் வெளியிட்டார்.
ராபின் ரிஹானா ஃபெண்டியாக பார்படோஸில் உள்ள பிரிட்ஜ் டவுனில் பிறந்தார். பல்வேறு போதை பழக்கத்திற்கு ஆளான அப்பாவுடன் அவருடைய குழந்தை வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அவருடைய அம்மா தான் குடும்பத்தை பார்த்துக் கொண்டார். ரிஹானா தன் தந்தையுடன் இணைந்து தொப்பிகள் மற்றும் பெல்ட்களை விற்று வாழ்ந்து வந்தார். ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து குழந்தைகளையும் காக்க எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று நான் யோசிப்பது உண்டு. நான் பெரியவளான பின்பு, வசதி வந்த பிறகு அனைத்து குழந்தைகளையும் காப்பாற்றுவேன் என்று நினைப்பேன். ஆனால் நான் விரைவிலேயே அந்த நிலைமைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை என்று 2017ம் ஆண்டு கூறினார். தன்னுடைய 17 வயதில் தன்னுடைய கெரியரை துவங்கினார். 18 வயதில் முதல் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தார்.
14 வயதில், பெண்கள் இசைக்குழுவான காண்ட்ராஸ்டை உருவாக்கினார். அவர்கள் ஈவன் ரிச்சர்ட்ஸின் நிறுவனத்தின் ஆல்பம் ஒன்றிற்காக ஆடிசனிற்கு சென்றனர். ரேப்பர் ஜேய் ஸியை சந்தித்த ஒப்பந்தமானர். அவருடைய முதல் ஆல்பம் 2005ம் ஆண்டு வெளியனது. மியூசிக் ஆஃப் தி சன் என்ற கரிபீயன் டான்ஸ் பாப் ஆல்பம் 2 மில்லியன் காப்பிகளை விற்று தீர்த்தது.
2007ம் ஆண்டு வெளியான அவருடைய மூன்றாவது ஆல்பம் குட் கேர்ள் கான் பேடில் இடம் பெற்ற அம்பர்லா அவரை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றது. முதன்முறையாக கிராமி விருதையும் அதற்காக பெற்றார். 2012ம் ஆண்டு கோல்ட் ப்ளே மற்றும் கனெய் வெஸ்ட்டின் ஆல் ஆஃப்தி லைட்ஸிலும் பணியாற்றினார். 31வது வயதில் மிகவும் ஆடம்பரமான ஃபேஷன் லேபிளை நடத்தும் முதல் கறுப்பின பெண்ணாக ரிஹானா அறியப்பட்டார். 2020ம் ஆண்டு யு.கே.விற்கு குடி பெயர்ந்த அவர் அந்நாட்டின் பணக்கார இசைக்கலைஞராக உள்ளார்.
source https://tamil.indianexpress.com/explained/who-is-rihanna-the-superstar-who-wants-focus-on-farmers-245721/