திங்கள், 22 பிப்ரவரி, 2021

எம்எல்ஏக்கள் ராஜினாமா : புதுவையில் காங்கிரசுக்கு சிக்கல்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் புதுச்சேரியில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ச்சியாக ராஜினாமா செய்து வருவது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

33 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபையில் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை இடமான 17 தொகுதிகளில் வெற்றி பெற்று சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேரருடன்19 இடங்கள் பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. தற்போது ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யும் இறுதி கட்டத்தில், காங்கரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை ஆட்டம் காண வைத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பே புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்ய உள்ளதாகவும், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மற்றும் மத்திய அரசின் கெடுபிடியினால் ராஜினாமா செய்ய உள்ளதாக அமைச்சர் கந்தசாமி தெரிவித்திருதார். இதனால் புதுச்சேரியில் தேர்தலுக்கு முன்பே ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலையில் இருந்தது. ஆனால் இந்த தகவலை முதல்வர் நாராயணசாமி மறுத்து வந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ச்சியாக 5 எமஎல்ஏக்கள் ராஜினாமா செய்தனர்.

இதனால் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் தலா 14 எம்எல்ஏக்கள் வைத்திருந்த நிலையில். காங்கிரஸ் கட்சி சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.  இதற்கிடையே புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பதவியேற்று கொண்டதை தொடர்ந்து, அவரை சந்தித்த எதிர்கட்சியினர் ஆளும்கட்சி பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தமிழிசை தனது முதல் உத்தரவாக காங்கிரஸ் கட்சி பிப்ரவரி 22-ல் (நாளை) பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து நாளை புதுச்சேரி சட்டபை கூட உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் ராஜ்பவன் காங்கிரஸ் எம்எல்ஏ லக்ஷ்மி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பலம் 13 ஆக குறைந்த நிலையில், மேலும் ஒரு அதிரடி திருப்பமாக தட்டஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இன்று அடுத்தடுத்து இரண்டு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பலம்  12-ஆக குறைந்துள்ளது.

இதன் மூலம் எதிர்கட்சியை விட ஆளும் காங்கிரஸ் கட்சி 2 இடங்கள் பின்தங்கியுள்ளது. இதனால் நாளை கூடும் சட்டசபையில் காங்கிரஸ் தனது பெரும்பான்மையை எப்படி நிரூப்பிக்க்போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் “இன்று மாலை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்திய முதல்வர் நாராயணசாமி, நாளை பெரும்பான்மை நிரூபிப்பது குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே ராஜினாமா செய்த அனைத்து எம்எல்ஏக்களும், மக்களுக்கு சேவை செய்வதில் இடையூறு ஏற்பட்டதால் பரவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்வதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததா? என கேள்வி எழுந்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-puducherry-congress-mlas-resigned-248721/