ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

நீலகிரிக்கே உரித்தான தாவரங்களை வளர்த்து வரும் ஆராய்ச்சியாளர் காட்வின் வசந்த்

 Ecologist Godwin Vasanth Bosco grows native shola trees and grass hill shrubs in Ooty : நீலகிரி அதன் சீதோசண நிலைக்காக நன்கு அறியப்படுகிறது. இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கை என்பதற்கு மாற்றாக கால நிலை மாற்றத்தாலும், மக்களின் செறிவு அதிகமாக காணப்படுதாலும், அளவுக்கு அதிகமான குடியேற்றத்தினாலும் சற்று திக்குமுக்காடி வருகிறது நீலகிரி என்றால் அதற்கு மாற்றுக் கருத்தே இல்லை. உலகில் ஒரே மாதிரியான இயற்கை அம்சங்கள் அனைத்து பகுதிகளிலும் காணப்படுவதில்லை. இலங்கை மற்றும்  தென்னிந்தியாவில் மட்டுமே காணப்படும், உயர்ந்த மலைப்பகுதிகளில் வளரும் சோலைகளும் (Shola forest), புற்களால் ஆன மலைப் பிரதேசங்களும் (Grasshills) ஒரு காலத்தில் நீலகிரியின் 70% நிலப்பரப்பாக இருந்தது.

Nilgiris news Kalanchoe grandiflora. Express photo by Nithya Pandian

ஆனால் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னால், நீலகிரியில் பயிரிடப்படும் பயிர்கள் மாற்றம் அடைந்தன. காடுகள் வெட்டப்பட்டு தேயிலை, தைல மரம், சின்கோனா, சில்வர்ஓக், காஃபி,  தேக்கு என்று பணப்பயிர்கள் மலைப்பிரதேசம் எங்கும் மலர துவங்கின. இதனால் நீலகிரியின் இயல்பான காலநிலையும், வாழ்வியல் சூழலும் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் துவங்கியது. இன்றும் தைலமரங்கள் இருப்பதால் நீர்பிடிப்பு பகுதிகள் பெரும் சவால்களை சந்திக்கின்றன.

strobilanthes lanataGolden Kurunji / strobilanthes lanata – Express photo by Nithya Pandian

பின்னர் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில்  இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் நலனுக்காக மேலும் பல்வேறு இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. காலத்திற்கு ஏற்ப காலநிலை மாற்றங்கள் தொடர்பாக முடிவினை எடுக்காவிட்டால் பிரச்சனைகள் விபரீதமாகும் என்பதை நாம் இப்போது தான் உணர துவங்கியிருக்கின்றோம். வெகு சிலரே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சளவில் இல்லாமல் செயல்களில் இறங்கியுள்ளனர்.

சோலைக்காடுகளில் வளரும் தாவரங்களுக்காகவே ஒரு நர்சரி

அப்படியான ஒருவர் தான் சூழலியல் ஆராய்ச்சியாளர் (Ecologist) காட்வின் வசந்த் போஸ்கோ. 2013ம் ஆண்டு முதல், சோலைக்காடுகள் மற்றும் கிராஸ்லேண்ட்களில் வளரும் தாவரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். மேலும் அழிக்கப்பட்ட அந்த பகுதிகளில் மீண்டும் காடுகளை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 1600 மீட்டர் உயரத்திற்கு அப்பால் வளரும் மிளகு கொடிகள் வரவேற்க அவருடைய நர்சரிக்கு சென்றோம்.

“தோடர்களுக்கும் கிராஸ்லேண்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவர்களிடம் சில முக்கியமான தாவரங்கள் குறித்து ஆராய்ந்து அந்த செடிகளை இங்கே வளர்த்து வருகின்றோம். அவர்களின் கோவிலுக்கு தேவையான அவுல்புல் (awful grass) இன்று பலரின் பார்வைக்கும் தெரியாத ஒன்றாகவே இருந்துவிட்டது. பலரும் அழிந்துவிட்டது என்று நினைத்த புற்களையும் தேடி எடுத்து வளர்த்து வருகின்றோம்” என்றார் வசந்த்.

 


சோலைகள் மற்றும் கிராஸ்லேண்ட் மீள் உருவாக்கப் பணிகள் எங்கெல்லாம் நடைபெற்று வருகிறது?

லாரன்ஸ் பள்ளி வளாகம், கோத்தகிரி, கொடைக்கானல்,  தொட்டபெட்டா மலைச்சிகரம் என்று பல இடங்களில் உள்ள சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மீள் உருவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள மூணாறு வனத்துறையினர் ஆலோசனை கேட்டுச் சென்று மலைகளுக்கே உரித்த செடிகளையும் மரங்களையும் வளர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அழிந்து வரும் இயற்கை வளங்களை  மனதில் கொண்டு “Wanna hear you sing” என்ற பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் காட்வின் வசந்த்.

nothapodytes nimmoniananothapodytes nimmoniana. Express photo by Nithya Pandian

இது ஏன் இன்னும் பரவலாகவில்லை?

”சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எத்தனையோ ஆண்டுகள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்ற நிலையில் அதனை முறையாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வெறும் பேச்சளவில் நின்றுவிடாமல் செயலில் இறங்கும் போது இதில் இருக்கும் பிரச்சனைகள் அறியப்பட்டது.  நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் இது போன்ற புற்களையும், பல ஆண்டுகள் கழித்து வருவாய் ஈட்டித்தரும் மரங்களையும் வளர்க்க விரும்பவில்லை என்பதே உண்மை. இதன் மூலம் அவர்களுக்கு வருவாய் ஈட்ட முடியும் என்ற நம்பிக்கை வரும் பட்சத்தில் நிச்சயமாக இதனை முன்னெடுத்து அவர்கள் செல்வார்கள் என்று நம்புகின்றேன்” என்று அவர் குறிப்பிட்டார். முயற்சிகள் எவ்வளவு தான் முழு மனதோடு மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அடுத்த தலைமுறையினருக்கு இது குறித்து துளியும் கூட அக்கறை இல்லை என்பது வேதனை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.