புதன், 10 பிப்ரவரி, 2021

போயஸ் இல்லம் பூட்டியது முதல் சம்பங்கி நீக்கம் வரை: ‘அலர்ட்’ அதிமுக

  4 ஆண்கள் சிறைவாசம் முடிந்து தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா சென்னை வந்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி விகே சசிகலா தண்டனைக்காலம் முடிந்து கடந்த ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜனவரி 31-ந் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டதை தொடர்ந்து, பெங்களூரிலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கினார்.

இதனைத் தொடர்ந்து நேற்று அவர் சென்னை திரும்பிய நிலையில், தமிழகம் முழுவதும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலா சிறை செல்வதற்கு முன்பு  கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அடுத்து முதல்வராகவும் அதிமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குள் அவர் சிறை தண்டனை பெற்றதால், தனது நம்பிக்கைக்கு உரியவராக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்துவிட்டு சிறை சென்றார். ஆனால் தற்போது அவரே அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக செயல்படுபவர்களின் முதன்மையானவராக உள்ளார்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று  அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்தை (அமமுக) தொடங்கிய டி.டி.வி தினகரன், ச்சிகலாவை வரவேற்க அதிமுகவின் பல நிர்வாகிகள் ஆர்வம் காட்டியதாகக் கூறினார். சிறையில் இருந்து வெளியானது முதல் தற்போது சென்னை வந்தது வரை, இதுவரை தனது அரசியல் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்றுவதில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் சசிகலாவின் இந்த தீவிரத்தை பார்த்து அதிமுகவில் அடுத்து என்ன நிகழுமோ என்ற படப்படப்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதற்கு முன்பே அவரை கட்டுப்படுத்த அதிமுக சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

விடுதலை நாளில் ஜெ.ஜெயலலிதா நினைவிடம் திறப்பு :

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சசிகலா விடுதலை செய்யப்பட்ட (ஜனவரி 27) அன்று ஜெயலலிதாவின் இந்த நினைவிடம் திறக்கப்பட்டது. அதிமுக அரசின் இந்த நடவடிக்கை சசிகலாவின் விடுதலையை தமிழக மக்களிடம் இருந்து நீக்கும் நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது.  ஆனால் இந்த நினைவிடம்  திறக்கப்பட்ட 2 நாட்களில் அதிரடியாக மூடப்பட்டது. பணிகள் இன்னும் நிறைவடையாத்தால் இந்த நினைவிடம் மூடப்படுவதாக சென்னை பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் போஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்றியது: 

ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் தமிழக அரசியலில் நீங்கமுடியாத இடத்தை பிடித்துள்ளது. அவர் இறந்த பிறகும் வேதா இல்லம் பரபரப்புக்கு உள்ளாகிய நிலையில், கடந்த மே மாதம், வேதா இல்லத்தை அதிமுக அரசு அரசுடைமையான அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைளிலும் ஈடுபட்டது. அதிமுக அரசின் இந்த நடவடிக்கை, வேதா இல்லத்தை சசிகலா அல்லது ஜெயலலிதாவின் உறவினர்கள் என யாரும் அந்த வீட்டை சொந்தம் கொண்டாட முடியாத அளவிற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் சசிகலா  சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அடுத்த நாள், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் மூத்த அதிமுக தலைவர்கள் முன்னிலையில் இந்த நினைவு இல்லம் திறக்கப்பட்டது. ஆனால் வேதா இல்லம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், பொது மக்களை வேத நிலம் வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், இந்த வீட்டிற்கான முக்கிய நுழைவு வாயில்கள் மட்டுமே திறக்கப்பட வேண்டும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் சசிகலா திரும்பியவுடன் இந்த இந்த இல்லத்தை பார்வையிடுவதை தடுக்கும் விதமாக, வேதா இல்லத்தின் நுழைவு வாயிலில், பலத்த பாதுகாப்பு மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை ராயப்ப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்திலும் பலத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சசிகலாவின் உறவினர்களுக்கு எதிராக நடவடிக்கை:

இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா கடந்த  ஜனவரி 31 ஆம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக தலைநகருக்கு அருகிலுள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தார்.  தொடர்ந்து சசிகலா சென்னை திரும்புவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்ட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சசிகலா உறவினர்களும், சொத்து குவிப்பு வழக்கில்,  சசிகலாவுடன் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களுமான, இளவரசி மற்றும் வி.என்.சுதகரன் ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தது.

source: https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-aiadmk-sasikala-return-to-chennai-aiadmk-actions-246559/