சனி, 27 பிப்ரவரி, 2021

ஏப். 6-ல் வாக்குப்பதிவு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் தமிழகத்தில் அமல்

26 2 2021  தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது

ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் (புதுச்சேரி) பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

அதோடு அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, கமலின் மநீம போன்ற கட்சிகள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

2020 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, இந்த மாநிலங்களுக்கான தேர்தல்கள் கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் நடத்தப்பட உள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட அதே நெறிமுறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து,இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் அதிகாரிகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். அதோடு 5 மாநிலங்களின் தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளனர்

மேற்கு வங்கத்தில் 294 இடங்களுக்கும், தமிழ்நாட்டில் 234 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

source : https://tamil.indianexpress.com/election/assembly-election-date-and-schedule-announcement-live-update-and-west-bengal-puducherry-kerala-tamil-nadu-and-assam-state-assembly-election-date-and-schedule-announcement-live-update-news-in-249648/