சவுதி மற்றும் குவைத் நாடுகளுக்கு அமீரகம் வழியாக இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றூ இந்தியா அறிவித்துள்ளாது. தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்று காரணமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம்.
“அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துபாயின் இந்திய துணைத் தூதரகம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்படுவது என்னவென்றால், சவுதி மற்றும் குவைத் செல்ல விரும்பிய இந்தியர்கள் சிலர் அந்த நாட்டில் சிக்கியுள்ளனர்” என்று திங்கள் கிழமை அன்று ட்விட்டரில் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கு பல்வேறு தடைகளை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. எனவே தற்போது இந்தியர்கள் துபாய் மற்றும் அபுதாபி வழியாக சவுதி அரேபியா மற்றும் குவைத்துக்கு செல்ல முடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு அமீரகத்தில் தடைகள் நீக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொத்தமாக அந்நாட்டில் 947 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 3,32,603 நபர்கள் இந்நோயால் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு துபாய் மற்றும் அபுதாபி முக்கிய மையப்புள்ளியாக விளங்குகிறது.
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் அந்நாட்டில் உள்ள கொரோனா தொடர்பான பயண வழிகாட்டுதல் அறிவுறுத்தியுள்ள நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளுங்கள் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது. மேலும் எந்தவொரு வெளிப்படையான தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான தனிப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் பணத்தினை எடுத்துச் செல்லவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
சொந்த நாட்டினரை தவிர்த்து, சவுதி அரேபியா 20 நாட்டில் இருந்து மக்கள் உள்ளே நுழைய தடை விதித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இதில் அடங்கும் என்று சவுதியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை செவ்வாய்கிழமை அன்று செய்தி வெளியிட்டது.
சவுதி மற்றும் குவைத் நாடுகளுக்கு செல்வதற்காக அமீரகத்தில் காத்திருக்கும் இந்தியர்கள் வீட்டிற்கு திரும்பலாம் என்று கூறியுள்ளது. அந்நாடுகள் பயணம் தொடர்பான முடிவில் மாற்றங்களை அறிவிக்கும் வரை பயணம் தொடர்பான முடிவுகள் ஏதும் எட்டப்பட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அமீரகத்தைக் காட்டிலும் கொரோனாவால் சவுதியில் 6,406 நபர்களும், குவைத்தில் 969 நபர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source : https://tamil.indianexpress.com/international/indians-advised-against-travelling-to-saudi-arabia-kuwait-via-uae-amidst-growing-coronavirus-cases-246669/