தமிழகத்தை சேர்ந்த சிறப்பு டி.ஜி.பி. ஒருவர் மீது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்துள்ளார். மூத்த அரசு அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய புகாரில், சிறப்பு டி.ஜி.பி, பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் கையை பிடித்ததாகவும், முத்தமிட்டதாகவும், அவரை பாட்டுப் பாட கூறியதாகவும், திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தவரின் பயணத்தை நிறுத்த சிறப்பு அதிகாரிகளை அனுப்பியதாகவும், அனைத்திற்கும் மேலாக அந்த ஐ.பி.எஸ். அதிகாரியின் மாமனாருக்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து சமரசம் பேச முற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து இந்த வழக்கை (suo motu) எடுத்துள்ளது. சி.பி.சி.ஐ.டி விசாரணையை நேரடியாக மேற்பார்வை இட இருப்பதாகவும் கூறியுள்ளது. மேலும் ஊடகத்துறையினர் இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டவரின் பெயர்களை பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது. செவ்வாய்க்கிழமை தன்னுடைய விசாரணையை துவங்கிய சி.பி.சி.ஐ.டி. குழு, நேரடியாக சாட்சிகளையும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளையும், பாதிக்கப்பட்ட நபரையும் விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தன்னுடைய புகாரில், கரூரில் பிப்ரவரி 21ம் தேதி அன்று, முதல்வரின் பிரச்சாரத்தின் போது பந்தோபஸ்த் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அன்று மாலை முதல்வரின் பிரச்சாரத்திற்கான பாதுகாப்பு பணிகளை பல்வேறு இடங்களில் மேற்கொண்ட போது, அடுத்த இடத்திற்கு தன்னுடைய காரிலேயே வரலாம் என்று சிறப்பு டி.ஜி.பி, ஐ.பி.எஸ் அதிகாரியிடம் கூறியுள்ளார். இருவரும் சிறப்பு டி.ஜி.பியின் காரிலேயே அடுத்தடுத்த இடங்களுக்கு பயணித்துள்ளனர். இதற்கு இடையே, தன்னுடைய பாதுகாப்பு அதிகாரியை சிறப்பு டி.ஜி.பி. வாகனத்திற்கு பின்னால் பயணித்து வர சொல்லி கூறியுள்ளார்.
மூன்றாவது இடத்தில் இருந்து, ஐ.பி.எஸ் அதிகாரி தன்னுடைய பணியை முடிக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, சிறப்பு டி.ஜி.பி. அதிகாரி அவருக்கு சிற்றுண்டி வழங்கியுள்ளார். மேலும் ”ஹெட்ரெஸ்ட்டுக்கு” தலையணை கொடுத்துள்ளார். அப்போது அந்த அதிகாரியை பாடச் சொல்லி வற்புறுத்தியுள்ளார் சிறப்பு டி.ஜி.பி., தொடர்ந்து கேட்டுக் கொண்டதால் அவரும் பாட்டுப்பாடியுள்ளார். பிறகு கையை தரும் படி கேட்டிருக்கிறார். சிறப்பாக பணியாற்றியதற்கு வாழ்த்துகள் கூற கையை கேட்கிறார் என்று நினைத்து கையை நீட்ட, அந்த கையை பிடித்துக் கொண்டு பாட்டுப்பாடியுள்ளார் சிறப்பு டி.ஜி.பி. 20 நிமிடத்திற்கு ஐ.பி.எஸ். அதிகாரியின் கையை முத்தமிட்டுள்ளார். பெண் அதிகாரி அவரிடம், இது சரியல்ல என்று தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இருப்பினும் மீண்டும் அவரை கையை பிடித்த வண்ணம் இருந்த சிறப்பு டி.ஜி.பி., பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம், அவர் பணியில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி, தன்னுடைய போனில் இருக்கும் மிகவும் பிடித்தமான படங்கள் இவை தான் என்று கூறியுள்ளார். காரில் இருந்து இறங்குவதற்கு முன்பு மீண்டும் அவரின் கையை பிடிக்க முற்பட்டிருக்கிறார் சிறப்பு டி.ஜி.பி.
இதற்கு அடுத்த நாள் சென்னையில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் த்ன்னுடைய முதல் புகாரை பதிவு செய்தார். பின்பு, கரூரில் இருந்து சென்னைக்கு டி.ஜி.பி, உள்துறை செயலாளரை சந்திக்க வந்த போது நடைபெற்ற குற்ற நடவடிக்கைகள் குறித்து இரண்டாவது புகாரையும் அவர் தெரிவித்தார். அந்த புகாரில் “தொடர்ந்து சிறப்பு டி.ஜி.பி. தன்னை அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முற்பட்டார். ஆனால் ஐ.பி.எஸ் அதிகாரி, போனை எடுக்கவில்லை.திருப்பி அழைக்கும் படி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு போன் செய்து, பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பயணத்தை செய்ய கூறுமாறு முறையிட்டுள்ளார். சென்னையை அடைவதற்கு முன்பு, செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் அவருடைய காரை வழிமறித்துள்ளார். சிறப்பு காவல்த்துறை வாகனம், ஐ.பி.எஸ் அதிகாரியின் காருக்கு முன்பு நின்றது. வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு அலுவலரை வண்டியில் இருந்து இறங்குமாறு கேட்டுக் கொண்டனர். பிறகு காரின் சாவியை எடுத்துக் கொண்டு சென்றனர்.
எனக்கு மிகப்பெரும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் நான் காரில் தனியாக இருக்க வைக்கப்பட்டேன் என்று தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். உங்களின் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்று சிறப்பு டி.ஜி.பி. கூறினார் என்று கண்ணன் தன்னிடம் கூறியதாகவும் புகாரில் அறிவித்துள்ளார் ஐ.பி.எஸ் அதிகாரி. நான் சென்னை செல்ல வேண்டும் வழியை விடக் கூறி கேட்டுக் கொண்ட போது கண்ணன் மறுத்துவிட்டார்.
மேலும் கண்ணன், சிறப்பு டி.ஜி.பி.யிடம் பேச வேண்டும் என்று வற்புறுத்தினார்.பேசவில்லை என்றால் மேற்கொண்டு பயணிக்க அனுமதி கிடையாது என்று கூறியுள்ளார். ஐந்து நிமிடங்கள் கழித்து சிறப்பு டி.ஜி.பியின் போனை எடுத்து பேசியுள்ளார். அப்போது “நடந்த நிகழ்விற்காக உங்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கின்றேன்” என்று கூறியுள்ளார். அப்போது அவர் தான் தற்போது காவல்த்துறையின் தலைமை அதிகாரியை சந்திக்க வேண்டும் என்றும் கண்ணனிடம் வழியை விட சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார். அதற்கு சிறப்பு டி.ஜி.பி. நம்முடைய உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் உளவுத்துறை அதிகாரிகள் இதனை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அதனால் நான் நடந்தவற்றை கூற வேண்டும் என்றும் கூறினார்.
நான் உங்களின் நண்பர் என்று கூறிய போது, நாம் நண்பர்கள் இல்லை. நான் (ஐ.பி.எஸ் அதிகாரியின் பதவி சேர்க்கப்படவில்லை) நீங்கள் சிறப்பு டி.ஜி.பி. என்றேன். நான் உங்களின் நலம் விரும்பி மற்றும் நண்பர். நான் உங்களுக்கு பின்னால் கிளம்பி வந்து கொண்டிருக்கிறேன்.நான் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவேன். நாம் பேசிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். முதல்வர் வருகையை ஒட்டிய நிகழ்வுகள் குறித்து சிறப்பு அதிகாரியிடம் தெரிவித்த பிறகு கண்ணனிடம் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு வழி விடுமாறு கூறியுள்ளார்.
அதே நாளில், ஐ.பி.எஸ் அதிகாரியின் மாமனாருக்கு சிறப்பு டி.ஜி.பி. சார்பில் யாரோ போன் செய்து, சமரசத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவருடைய போன் நம்பர் புகாரில் பதிவிடப்பட்டுள்ளது. அவர், டி.ஜி.பி. தேவையற்று நடந்து கொண்டார் என்றும் நடந்தவற்றிற்காக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து எதுவும் தெரியாத அவர் அழைப்பை துண்டித்துள்ளார்.
ஐ.பி.எஸ் அதிகாரியின் புகாரில், சிறப்பு டி.ஜி.பி தன்னுடைய அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி, அதிகாரிகளை இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார். செங்கல்பட்டு எஸ்.பி.ஐ மற்றும் அவரின் ஸ்ட்ரைக்கிங் ஃபோர்ஸை பயன்படுத்தியது, காவல்துறை அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியதன் உச்சம் என்றும், ஐ.பி.எஸ் அதிகாரிகளை அவருக்கு ஆதரவாக என்னிடம் பேச அனுப்பியது குற்றம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டில் இருக்கும் நபர்களுக்கு அழைப்பு விடுத்து புகாரை வாபஸ் வாங்க முயற்சித்தது மிகவும் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரிகள், சிறப்பு டி.ஜி.பியை உடனே தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், இல்லை என்றால் வழக்கு விசாரணையின் போக்கினை மாற்ற முற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் சிறப்பு டி.ஜி.பியை உடனே பதவியில் இருந்து இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பிப்ரவரி 24ம் தேதி அன்று அவரை பதவியில் இருந்து நீக்கி, காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது தமிழக அரசு.
source : https://tamil.indianexpress.com/tamilnadu/in-car-on-phone-ips-officer-lists-harassment-by-tamil-nadu-dgp-250491/