டெல்லியில் ஐந்து மாநகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நான்கு இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி வடகிழக்கு டெல்லியில் சவுகான் பங்கர் தொகுதியை கைப்பற்றியது. பாஜக ஒரு இடத்தையும் கைபற்றாமல் படுதோல்வி அடைந்தது.
டெல்லியின் மூன்று மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் இந்த வெற்றி முக்கியத்துவம் பெறுகிறது.
ரோகிணி மாநகராட்சி வார்ட்டில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதன் தற்போதைய கவுன்சிலர் கடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
டெல்லியில் மொத்தம் 272 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. அதில், ஐந்து வார்டுகளுக்கு மட்டும் இடைத்தேர்தலை நடைபெற்றது. இருப்பினும், பாஜகவின் இரும்புக் கோட்டையாக கருதப்படும் ஹாலிமர்பாக் வார்டில் அக்கட்சி தோற்றிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ஐந்து வார்டுகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி கட்சி 46.10% வாக்குகளைப் பெற்றது; பாஜக 27.29% வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 21.84% வாக்குகளையும் பெற்றது.
இதேபோல், குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய கிழக்கு டெல்லியில் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட சவுகான் பங்கர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியுற்றது. காங்கிரஸ் வேட்பாளர் சவுத்ரி சுபைர் அகமது, ஆம் ஆத்மி கட்சியின் இஷ்ராக் கான் என்பவரை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சவுகான் பங்கர் கடந்த முறை ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்தது. குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பான கலவரம், கொரோனா காலங்களில் தில்லி நிஜாமுதீன் மார்க்கசில் தங்கியிருந்த தப்லிகி ஜமாத் தின் உறுப்பினர்கள் மீது போடப்பட்ட பொய் குற்றச்சாட்டு போன்ற சமூக-அரசியல் நிகழ்வுகள் ஆம் ஆத்மி தோல்விக்கு வழிவகுத்தன.
காங்கிரஸ் ஒரு இடத்தைக் கைப்பற்றினாலும், சவுகான் பங்கரைத் தவிர அனைத்து இடங்களிலும் பாஜக இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம், டெல்லியில் சில பகுதிகளைத் தவிர்த்து காங்கிரசின் செல்வாக்கு மேலும் குறைந்து கொண்டு வருகிறது என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது.
டெல்லி மாநகராட்சிகள் பாஜக கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறது. தற்போது, ஊழல், நிர்வாக சீர்கேடு, பொது மக்கள் இன்னல்கள் போன்ற குற்றச் சாட்டுகளை முன்வைத்து பாஜகவுக்கு எதிரான ஒரு அரசியல் கட்டமைப்பை ஆம் ஆத்மி உருவாக்கி வருகிறது.
இன்றைய முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் அமைந்தாலும், வரும் காலங்களில் கடுமையான போராட்டங்களை அக்கட்சி சந்திக்க நேரிடம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மறுபுறம், ஒரு இடத்தை தக்கவைத்த காங்கிரஸ் சிறிய ஊக்கத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால், மற்ற இடங்களில் இரண்டாவது இடத்தைக் கூட அடைய முடியாத நிலையில் தான் உள்ளது.
மிகப்பெரிய இழப்பை பாஜக கட்சி சந்தித்துள்ளது. ஒரு இடத்தை கூட கைப்பற்றவில்லை. ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்குகளில் பாதியைத் தான் பதிவு செய்திருக்கிறது. ஆட்சிக்கு எதிரான நிலை (Anti-incumbency) பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
source : https://tamil.indianexpress.com/explained/delhi-mcd-bypoll-results-aap-won-4-seats-congress-one-seat-blow-for-bjp-250575/