Tamil Nadu council and cabinet ministers : தமிழக 16வது சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினர். 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமையிலான அரசு இன்று காலை 9 மணிக்கு பதவி ஏற்றது. நேற்று (06/05/2021) மாலை அமைச்சரவையில் இடம் பெறும் தலைவர்களின் பட்டியல் வெளியானது. திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட 34 நபர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் புதிய முகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் இணைந்த பல முக்கியத் தலைவர்களுக்கு அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனிதா ராதாகிருஷ்ணன்
அதிமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2009ம் ஆண்டு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். பிறகு அவர் திமுகவில் இணைந்தார். திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக கடந்த முறை தேர்வானார். ஆறாவது முறையாக அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். அவருக்கு தற்போது மீன்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது
சு. முத்துசாமி
எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆளுமைகளில் ஒருவராக முத்துசாமி. அப்போது அவர் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்து வந்தார். ஜெயலலிதாவின் ஆட்சியின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆனால் அக்கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் அவர் திமுகவில் தண்ணை இணைத்துக் கொண்டார். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அவர் தோல்வியுற்ற போதிலும், இம்முறை ஈரோடு மேற்கு தொகுதியில் நின்று, முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தை எதித்து போட்டியிட்டார். 22,089 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். சு. முத்துசாமிக்கு தற்போது வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதிக் கட்டுப்பாடு நகரத் திட்டமிடல் நகா்ப்புற வளா்ச்சி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் இலக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, முக ஸ்டாலின் என்று மூன்று தமிழக முதல்வரின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ஆர். எஸ். கண்ணப்பன்
ஆர். எஸ். கண்ணப்பன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் துவங்கினார். எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக அவர் 1972ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அவரின் மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக உடைந்த போது ஜெவிற்கு துணையாக நின்றார். 1991ம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரத்துறை என மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். . பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை துவங்கி 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். பிறகு கட்சியை கலைத்துவிட்டு தனனை திமுகவில் இணைத்துக் கொண்டார். ஆனால் பதவி விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்து 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இம்முறை திமுக சார்பில் ராமநாதபுரம் முதுக்குளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அவருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுபேற்றுள்ளார் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் மற்றும் கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி. 2006 – 2011 காலகட்டத்தில் அதிமுகவின் எம்.எல்.ஏவாக அவர் பதவி வகித்தார். 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அவர் அமமுகவிற்கு ஆதரவு அளித்து வந்த நிலையில் அரசு கொறடா உத்தரவை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அரவக்குறிச்சி தொகுதியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு கரூர் தொகுதி வழங்கப்பட்டது. அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்ட அவர் 12,461 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் செந்தில் பாலாஜி.
பி.கே. சேகர் பாபு
சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.கே. சேகர் பாபு. அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 16 சட்டமன்ற தேர்தல்களில், 1977 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் 10 முறை தொடர்ந்து இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு மீண்டும் அன்ற வெற்றியை திமுகவிற்கு வசமாக்கி கொடுத்தவர் சேகர்பாபு. தமிழகத்தில் மிகச்சிறிய தொகுதியாக இந்த தொகுதி இருந்தாலும் திமுகவின் வலுவான கோட்டையாக பார்க்கபப்டுகிறது. திமுகவில் இணைவதற்கு முன்பு சேகர் பாபு, ஜெயலலிதாவின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒருவராக இருந்தார். 2001 மற்றும் 2006 தேர்தல்களில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இம்முறை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர். தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேறுள்ளார்.
source https://tamil.indianexpress.com/election/tamil-nadu-council-and-cabinet-ministers-some-are-sidelined-by-aiadmk-brought-back-to-dmk-300814/