திங்கள், 10 மே, 2021

சென்னை உள்பட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை

கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நேற்று ஆளுநர் முன்னிலையில் பொறுப்பேற்றது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக சைதை சட்டமன்ற உறுப்பினராக வெற்றிப் பெற்ற மா.சுப்ரமணியன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதவியேற்புக்கு பின், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின், அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

 செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா,சுப்ரமணியன், ‘கொரோனா காலகட்டத்தில் உயிர்காக்கும் மருந்தாக ரெம்டெசிவிரை மக்கள் கருதுகின்றனர். ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மக்கள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையை மாற்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய, அதற்கான வழிகளை ஏற்படுத்தி உள்ளோம். இதற்காக அந்த மாவட்ட மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தினை அனுப்ப தயாராக உள்ளோம்.

தொடர்ந்து பேசிய அவர், ‘சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். மருத்துவமனையின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்ட்டம், கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் எனவும், வருகிற 12-ம் தேதிக்குள் தமிழகத்தில் கூடுதலாக 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 500 டோஸ்கள் வரை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, மருத்துவரின் பரிந்துரையோடு வருபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-kipauk-hospital-remdisivir-madurai-trichy-health-minister-ma-subramaniam-301200/