மு.க.ஸ்டாலின் ஆட்சியில் முக்கிய பதவிகளை பெற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு முதல் அனு ஜார்ஜ் வரை அவர்களின் கடந்த கால சிறப்பான செயல்பாடுகளையும் பின்னணியையும் மீண்டும் ஒருமுறை திரும்ப பார்ப்போம்.
பண்முக ஆளுமை இறையன்பு ஐ.ஏ.எஸ்
இறையன்பு ஐஏஎஸ் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஐஏஎஸ் அதிகாரியாக மட்டுமல்லாமல், மேடைப் பேச்சாளராகவும், தன்னம்பிக்கையூட்டும் நூல்களின் எழுத்தாளராகவும் நாடறிந்தவர். தமிழக அரசில் இவரைவிட 11 சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கின்ற நிலையில் இறையன்பு ஐஏஎஸ்-க்கு தலைமைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இறையன்பு, 1987ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 15வது இடத்தையும் தமிழக அளவில் முதல் இடத்தையு பெற்று தேர்ச்சி பெற்றார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவி ஆட்சியராக தனது ஐஏஎஸ் பணியைத் தொடங்கிய இறையன்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது செயல்பட்டார். கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொண்டார். நன்றி மறக்காத அந்த மக்கள் அந்தபகுதிக்கு இறையன்பு நகர் என்று பெயர் சூட்டி அழைத்து வருகின்றனர்.
இளங்கலை வேளாண்மை படித்திருந்த இறையன்பு ஐஏஎஸ் இதுவரை படித்து பல பட்டங்களைப் பெற்றுள்ளார். உளவியலில் முதுகலைப் பட்டம் , வர்த்தக நிர்வாகத்தில் முனைவர் பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம், மேலாண்மையில் முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். மேடைப் பேச்சுகளில் ஆற்றொழுக்காக உரையாற்றி இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார். வள்ளுவரையும் ஷேக்ஸ்பியரை ஒப்பீடு செய்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இறையன்பு, ஐஏஎஸ் ஆவது எப்படி என்ற நூலின் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு ஐஏஎஸ் ஆவதற்கான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் அளித்துவருகிறார்.
இலக்கியத்தில் ஆர்வம் மிக்க இறையன்புவை, 1995ம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு அதிகாரியாக நியமித்தார். இறையன்பு உலகத் தமிழ் மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினார்.
அதே போல, 2010ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டினார்.
முதலமைச்சரின் முதன்மை தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ், இதற்கு முன்பு தொல்லியல் துறை இயக்குனராகப் பதவி வகித்து வந்தார். உதயச்சந்திரன் 23 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 35வது இடத்தை பிடித்தார். இவர் ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியபோது, தொழில்நுட்பப் பூங்கா, ஏழை மாணவர்களுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள உதயச்சந்திரன் அந்த துறைகளுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
இறையன்பு ஐஏஎஸ் சுற்றுச்சூழல், வனத்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை செயலாளராக இருந்த போது சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த இறையன்பு, அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பயிற்சித் துறைத் தலைவராக இருந்தபோது அலுவலக உதவியாளர், எழுத்தர், அலுவலர், என பல பிரிவு அரசு பிரிவினருக்கும் சுழற்சி அடிப்படையில் கணினி பயிற்சியை வழங்கினார்.
தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இறையன்பு, 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது, சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், உட்பட முக்கிய பொறுப்புகளில் துணை முதல்வரின் செயலாளராகவும் இருந்தார். இந்த சூழலில்தான், மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உதயச்சந்திரன் மாணவர்கள் மதிப்பெண்களில் தரவரிசையை ஒழித்த தரமான ஐஏஎஸ்
உதயச்சந்திரன் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்தபோது சமச்சீர் கல்வி பாடத்திட்ட வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றினார். அதைவிட முக்கியமானது தேர்வில் இருந்து வந்த தர மதிப்பீட்டு முறையை முற்றிலும் மாற்றினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக இருந்தபோது, இணையம் வழியக விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட் பதிவிறக்கம், கணினி சார் தேர்வுகள் போன்ற புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தினார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது, மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள ஏழைப்பெண்களுக்கான கடன் உதவி பெற நடவடிக்கை எடுத்தார்.
உதயச்சந்திரன் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையின் ஆணையராக இருந்துபோது, வீடுகட்டும் திட்டத்தில் ஏழை மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தினார்.
மேலும், தமிழ்நாடு மின்னணுக் கழத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தபோது, ஐடி துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் பெற நடவடிக்கை எடுத்தார். அதுமட்டுமில்லாம், தமிழ் இணையக்கல்வி கழகத்தின் இயக்குநராக இருந்தபோது பல ஆயிரக் கணக்கான அரிய நூல்களை பிடிஎஃப் மின்னணு முறையில் உருவாக்க நடவடிக்கை எடுத்தார்.
தொல்லியல் துறை இயக்குநராக இருந்த உதயச்சந்திரன், கீழடி அகழாய்வுப் பணிகளை விரிவுபடுத்தினர். இப்படி உதயச்சந்திரன் தான் பொறுப்பேற்ற எல்லா துறைகளிலும் தனி முத்திரை பதித்தார். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளராக பதவி வகிக்கும் உதயச்சந்திரன் இங்கேயும் தனது சாதனைக் கொடியை பறக்கவிடுவார்.
தமிழ்நாடு மருந்துப்பொருள் கழகத்தை காப்பாற்றியா உமாநாத் ஐஏஎஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய தனிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள உமாநாத் ஐஏஎஸ், இதற்கு முன்பு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குனராகப் பதவி வகித்தார். எம்.பி.பி.எஸ் மருத்துவரான உமாநாத் 2001ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆனார்.
விருது நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாவட்ட நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கலை மேற்கொண்டவர். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மருந்துப் பொருட்கள் கழக இயக்குநராக பதவி வகித்த உமாநாத் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகலை முன்கூட்டியே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தார். மாநிலத்தில் மருத்துவ ஆக்ஸிஜன் கையிருப்பை உயர்த்த நடவடிக்கை எடுத்தார். தமிழ்நாடு மருந்துப்பொருள் கழகத்தை தனியார் கைகளுக்கு செல்வதைத் தடுத்து காப்பாற்றினார்.
2006-2011 வரையிலான திமுக ஆட்சியின்போது, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 2010ம் ஆண்டு உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றது. அப்போது உமாநாத் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தார்.
பாரத் நெட் டெண்டரில் கையெழுத்திட மறுத்த நேர்மை ஐஏஎம்ஸ் எம்.எஸ்.சண்முகம்
சென்னையைச் சேர்ந்த எம்.எஸ்.சண்முகம் 2002ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆனார். இவர் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மாவட்டத்தில் நிர்வாக ரீதியாகவும், மக்கள் எளிதில் அணுகும் விதமாக பல முன் மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தமிழ்நாடு ஃபைபர் நெட் நிர்வாக இயக்குநராக பதவி வகித்த எம்.எஸ்.சண்முகம், அந்த துறையில் உறுதியான முடிவுகளை எடுத்தார். அதிமுக ஆட்சியின் போது பாரத் நெட் விவகாரத்தில் டெண்டரில் கையெழுத்து போட எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் மிஸ்டர் நேர்மையான ஐஏஎஸ் என்று பாராட்டப்பட்டார். பாரத் நெட் டெண்டர் பிரச்னை வந்தபோது அந்த ஏல முறையே தவறானது என்று கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து நேர்மையாக நின்றார். இதனால், அமைச்சர்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.எஸ். சண்முகம் இடமாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு, அருங்காட்சியங்கள் துறையின் ஆனியாராக மாற்றப்பட்டார். இது குறித்து அப்போது திமுக மூத்த தலைவர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி போன்றவர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த சூழலில்தான், எம்.எஸ்.சண்முகம் முதல்வர் மு.க.ஸ்டாலினுடைய தனிச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு அடிபணியாத அனு ஜார்ஜ் ஐஏஎஸ்
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடைய முதன்மைச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரியான அனு ஜார்ஜ், இதற்கு முன்னதாக தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை இயக்குனராக பதவி வகித்தார். கேரளாவை சேர்ந்த அனு ஜார்ஜ் எம்.ஏ. சோஷியாலஜி படித்தவர். 2003-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்ச்சிபெற்று ஐஏஎஸ் அதிகாரியானார். பின்னர், தொழில்துறை ஆணையராக பணியாற்றினார். இவர் அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, அம்மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு அமைச்சர்களின் சிபாரிசுகளை புறந்தள்ளிவிட்டு, தகுதியானவர்களுக்கு பணி வழங்கினார். ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகளுக்காக பல கல்வித்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து வழக்கு தொடர்ந்தார். நேர்மையாளர்களுக்கு எப்போதும் வழக்கமாக கிடைக்கிற டிரான்ஸ்ஃபர் பரிசு இவருக்கும் கிடைத்தது.
அனு ஜார்ஜ் பொதுப்பணித்துறை இணை செயலாளர், தமிழ்நாடு சர்க்கரை கழக இயக்குநர் பணிகளில் திறம்பட பணியாற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி சடங்குகளை அமுதா ஐ.ஏ.எஸ் உடன் இணைந்து நடத்தினார். தற்போது முதல்வரின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அனு ஜார்ஜ் இங்கேயும் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியாகவும் திறமையான அதிகாரியாகவும் செயல்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalins-personal-secretaries-udayachandran-umanath-ms-shanmugam-anu-george-and-chief-secretary-iraianbu-ias-301559/