திங்கள், 10 மே, 2021

ஊரடங்கின் போது போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்: டிஜிபி திரிபாதி உத்தரவு

 தமிழகத்தில் நாளை மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த ஊரடங்கை அறிவித்துள்ளது.




இந்த ஊரடங்கில் பால், மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற சேவைகள் அனைத்துக்கும் அனுமதி இல்லை.

இருப்பினும் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், பொதுமக்களில் சிலர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றி வந்தனர். அவர்களை காவல் துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். சில இடங்களில் காவல் துறையினர் ஊரடங்கை மீறுபவர்களுக்கு நூதன தண்டனையும் வழங்கினர்.

ஆனால் அப்போது, ஊரடங்கில் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் காவல்துறையினரால் தவறுதலாக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

வாகன தணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய அறிவுரைகள்

ஊரடங்கு விதிகளை மீறும் வாகனங்களை புகைப்படம் எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

ஊரடங்கு விதிமுறை மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. அப்படியே வாகனத்தினை கைப்பற்றினாலும் சில மணி நேரங்களில் அவற்றை விடுவித்தல் வேண்டும்.

இ பாஸ் வைத்து பயண அனுமதி பெற்றுள்ள வாகனங்களை அரசு வழிகாட்டுதல் படி அனுமதித்தல் வேண்டும்.

ஊரடங்கு காலகட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பான முறையில் பராமரித்தல் வேண்டும். சட்டமன்ற கூட்டத் தொடர் மற்றும் ரம்ஜான் பண்டிகை போன்றவை வருவதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.

மளிகை, காய்கறி மற்றும் இறைச்சி கடை வியாபாரிகளை கையாளுதல்

வணிகர்கள், சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோரிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்த பின்பு அவர்களிடம் வியாபாரத்தை முடித்து கொள்ளுமாறு கண்ணியமான முறையில் கூற வேண்டும்.

மளிகை கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் காய்கறி கடைகள் போன்றவற்றில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து வியாபாரிகளும் தங்கள் கடைகளின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தேவையான வட்டங்களை வரைவதை உறுதி செய்ய வேண்டும்.

ஊரடங்கு காலகட்டத்தில் பால், மளிகை பொருட்கள், காய்கறிகள், மருத்துவ பொருட்கள் மற்றும் மருந்துகள், ஆக்ஸிஜின் சிலிண்டர், இதர உபகரணங்கள் ஆகியவற்றை எடுத்து செல்லும் வாகனங்கள் தடையின்றி செல்வதை உறுதி செய்தல் வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் பிற அரசுத்துறை அதிகாரிகளிடம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ பொதுமக்களிடம் நடந்து கொள்ளக் கூடாது.

பொது ஒலிபெருக்கியை பயன்படுத்தி பொது மக்களை கண்ணியமான முறையில் அறிவுறுத்தி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். ட்ரோன் கேமிராக்களை பயன்படுத்தி பொதுமக்கள் கூட்டமாக கூடுகிறார்களா என்பதை கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். தடியடி நடத்தியோ அல்லது பலப்பிரயோகம் செய்தோ கூட்டத்தை கலைக்க எந்த சூழ்நிலையிலும் ஈடுபடக்கூடாது..

பிற அரசுத் துறைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்துறையினர், உள்ளாட்சி மற்றும் நகராட்சி துறையினர், துாய்மை பணியாளர்கள் போன்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். மேலும், அடையாள அட்டையுடன் அவர்கள் எவ்வித இடையூறுமின்றி பணிக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

50 வயதைக் கடந்த காவலர்கள், பெண் காவலர்கள் மற்றும் நோய்களால் அவதிப்படும் காவவர்களுக்கு ஊரடங்கு காலகட்டத்தில் இலகுவான பணி மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும். அவர்களை வாகன சோதனை மற்றும் பிரிக்கெட்டிங் பணி போன்றவற்றில் ஈடுபடுத்தக்கூடாது. கொரோனா தடுப்பூசிகளை முழுமையாக எடுத்துக் கொண்டுள்ள காவலர்களை மட்டுமே கூட்டம் கூடும் இடங்களில் பணியமர்த்த வேண்டும்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-dgp-tripathi-corona-lockdown-advice-to-police-officials-301510/