19/5/2021 சிங்கப்பூரில் காணப்படும் நாவல் கொரோனா வைரஸின் ஒரு மாறுபாடு இந்தியாவில் 3வது அலைக்கு வழிவகுக்கும் என்று நேற்று செவ்வாய் கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். மேலும் சிங்கப்பூருடனான விமான சேவைகளை உடனடியாக நிறுத்துமாறும் மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சருக்கு “கோவிட் மாறுபாடுகள் அல்லது சிவில் விமானக் கொள்கை குறித்து பேச எந்த தகுதியும் இல்லை” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், டெல்லி முதல்வர் இந்தியாவுக்காக பேசவில்லை என்றும், பொறுப்பற்ற கருத்துக்கள் நீண்டகால கூட்டாண்மைகளை சேதப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் மாறுபாடு குறித்து நேற்று இரவே மறுத்து பேசிய சிங்கப்பூரின் சுகாதார அமைச்சகம், “அறிக்கைகளில் காணப்படும் கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை. சமீபத்திய வாரங்களில் கொரோனா தொற்றுகளில் நிலவும் திரிபு B.1.617.2 மாறுபாடு ஆகும். இது இந்தியாவில் தோன்றியது. பைலோஜெனடிக் சோதனை இந்த B.1.617.2 மாறுபாட்டை சிங்கப்பூரில் உள்ள பல கிளஸ்டர்களுடன் தொடர்புபடுத்தியுள்ளது” என்றார்.
இன்று புதன்கிழமை காலை, இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறுகையில், “சிங்கப்பூர் கொரோனா வைரஸ் மாறுபாடு” குறித்த டெல்லி முதல்வரின் ட்வீட்டிற்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்க சிங்கப்பூர் அரசு இன்று எங்கள் உயர் ஆணையரை அழைத்தது. கோவிட் மாறுபாடுகள் அல்லது சிவில் விமானக் கொள்கை குறித்து பேச டெல்லி முதல்வருக்கு எந்த தகுதியும் கிடையாது என்று எங்கள் உயர் ஆணையர் தெளிப்படுத்தியுள்ளார்’ என்றார்.
இந்த விவகாரம் குறித்து சில நிமிடங்கள் கழித்து கருத்து தெரிவித்த வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், “கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூரும் இந்தியாவும் உறுதியான பங்காளிகளாக இருந்து வருகின்றன. ஒரு தளவாட மையமாகவும் ஆக்ஸிஜன் சப்ளையராகவும் சிங்கப்பூரின் பங்கு இருந்து வருகிறது.
இருப்பினும், இந்த இரு நாட்டு உறவுகள் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண்டியவர்களின் பொறுப்பற்ற கருத்துக்கள் நீண்டகால கூட்டாண்மைகளை சேதப்படுத்தும் என்று நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். டெல்லி முதல்வர் இந்தியாவுக்காக பேசவில்லை, ”என கூறினார்.
இது குறித்து ஒரு நாள் முன்னதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா வைரஸின் இந்த புதிய மாறுபாடு ஆபத்தை விளைவிக்கும் என்றும், குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் கூறியிருந்தார்.
“சிங்கப்பூரில் காணப்படும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் மூன்றாவது அலைக்கு (COVID-19 இன்) வழிவகுக்கும். சிங்கப்பூருடனான விமான சேவைகளை உடனடியாக நிறுத்தவும், முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் ஈடுபடவும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். ” என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையில் தலைநகர் டெல்லியில், ‘கோவிட் -19 நேர்மறை விகிதம் (பாசிடிவ்) 6.89 சதவீதமாக குறைந்துள்ளது. திங்களன்று, நேர்மறை விகிதம் 8.42% ஆக இருந்தது. இது, நகரத்தில் சோதனைகளின் எண்ணிக்கை திங்களன்று 53,756 லிருந்து செவ்வாய்க்கிழமை 65,004 ஆக அதிகரித்தது’ என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
‘மேலும் இறப்புகளும் திங்களன்று 340 இலிருந்து 265 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 4,482 புதிய வழக்குகள் உள்ளன, இது திங்களன்று அறிவிக்கப்பட்ட 4,524 ஐ விட சற்றே குறைவு. நகரம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட 24,305 படுக்கைகளில், தற்போது 9,906 காலியிடங்கள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில், கடந்த மே 1 ஆம் தேதி முதல் 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் தொற்று உறுதியாயுள்ள நபர்களின் எண்ணிக்கை (நேர்மறை விகிதம்) குறைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.