உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தல்கள் மூன்று நாட்கள் எண்ணிக்கைக்கு பிறகு முடிவானது. அதிகாரப்பூர்வ கட்சி சின்னங்கள் இல்லாத நிலையில், எந்தவொரு கட்சிக்கும் வெற்றி பெற்றவர்களின் சரியான எண்ணிக்கையை தீர்மானிக்க முடியாது. இருப்பினும், சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் தாங்கள் பாஜகவைத் தோற்கடித்துவிட்டதாகக் கூறி, அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இதை ஒரு போக்காக முன்வைக்கின்றனர்.
பஞ்சாயத்து ராஜ் அமைப்பு
இந்த அமைப்பு மூன்று அடுக்குகளைக் கொண்டது. முதல் அடுக்கில் கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. உ.பி.யில் 58,176 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளது. ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து வாக்காளர்களும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களையும் கிராம பஞ்சாயாத்து தலைவர் ஒருவரையும் தேர்ந்தெடுக்கிறார்க. கிராம பஞ்சாயத்தில் மொத்தம் 7.32 லட்சம் பதவிகள் உள்ளன.
இரண்டாவது அடுக்கில் வட்டார வளர்ச்சி அளவில் க்ஷேத்ரா பஞ்சாயத்துகள் உள்ளன. உ.பி.யில் 826 க்ஷேத்ரா பஞ்சாயத்துகள் உள்ளன. இது ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 8-10 க்ஷேத்ரா பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொரு க்ஷேத்ரா பஞ்சாயத்துக்கும் சராசரியாக 80-90 வார்டுகள் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 75,852 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மூன்றாவது அடுக்கு மாவட்டங்கள் அளவில் ஜில்லா பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது. உத்தரப் பிரதேசம் 75 ஜில்லா பஞ்சாயத்துகளைக் கொண்டுள்ளது. அவைகள் மொத்தம் 3,050 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளின் உறுப்பினர்களும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
826 க்ஷேத்ரா பஞ்சாயத்துகளின் தலைவர்கள் (உள்ளூரில் வட்டார பிரமுகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்) மற்றும் 75 ஜில்லா பஞ்சாயத்துகளின் தலைவர்கள் (ஜில்லா பஞ்சாயத்துத் தலைவர்கள்) அந்தந்த க்ஷேத்ரா பஞ்சாயத்துகள் மற்றும் ஜில்லா பஞ்சாயத்துகளின் வார்டு உறுப்பினர்களால் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
தேர்தலும் முடிவுகளும்
3,050 ஜில்லா பஞ்சாயத்து வார்டுகள், 75,000 க்கும் மேற்பட்ட க்ஷேத்ரா பஞ்சாயத்து வார்டுகள் மற்றும் 7 லட்சம் கிராம பஞ்சாயத்து வார்டுகள் உட்பட சுமார் 8 லட்சம் பதவிகளுக்கு 13 லட்சத்துக்கும் குறைவான வேட்பாளர்கள் இடையே நடக்கும் ஒரு மிகப்பெரிய தேர்தலாகும்.
இதில் வேட்பாளர்க்ள் கட்சி சின்னங்களில் போட்டியிடுவதில்லை. ஆனால், இம்முறை 3,050 ஜில்லா பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் இடங்களுக்கான வேட்பாளர்களின் பட்டியலை மாநில பாஜக முதல் முறையாக அறிவித்தது. அது ஆதரித்த வேட்பாளர்கள் 900 இடங்களுக்கு மேல் வென்றுள்ளதாக அது கூறுகிறது. அதாவது, பாஜக ஆதரவு வேட்பாளர்கள் 2,000 இடங்களுக்கு மேல் தோல்வியடைந்துவிட்டனர்.
1000 இடங்களுக்கு மேல் வென்றதாக சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சி 300 இடங்களையும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலா 70 இடங்களையும் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்தவொரு கட்சியாலும் ஆதரிக்கப்படாத சுயேட்சை வேட்பாளர்களால் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், உயர் பதவிகளில் மறைமுக தேர்தல்களில் அவர்களுடைய வாக்குகள் முக்கியமானதாக இருக்கும்.
இந்த தேர்தல் பாஜகவுக்கு உணர்த்துவது என்ன?
முக்கியமாக நகர்ப்புறக் கட்சியாகக் கருதப்படும் பாஜக ஒருபோதும் நேரடியாக பஞ்சாயத்து தேர்தலில் நுழைந்ததில்லை. மாறாக கிராமத் தேர்தல்களைத் தவிர்த்தது. வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பது உள்ளிட்ட பெரிய தயாரிப்புகளுக்குப் பிறகு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஜனவரி மாதம், பாஜக ஒவ்வொரு ஆறு பிராந்தியங்களுக்கும் உயர் மட்ட குழுக்களை அமைத்தது. ஒவ்வொரு குழுவும் ஒரு அமைச்சரையும் ஒரு மூத்த தலைவர் பொறுப்பாளராகவும் உள்ளூர் அலுவலக பொறுப்பாளர்களையும் உள்ளடக்கியது. முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரபிரதேசத்தின் பாஜக பொறுப்பாளர் ராதா மோகன் சிங் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் அவர்களே இந்த தயாரிப்புகள் குறித்து திறணாய்வு நடத்தினர்.
இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்று கட்சி அறிவித்திருந்தது. அம்மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இது ஒரு நல்ல வாய்ப்பை அளிக்கும் என்று நம்பி பலர் அவ்வாறு செய்தனர்.
இருப்பினும், அயோத்தி மற்றும் வாரணாசியில்கூட பெரும்பாலான இடங்களில் தோல்வி ஏற்பட்டது. பாஜக ராமர் கோயில் கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளது. அயோத்தி மற்றும் வாரணாசியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பெரும் நிதிகளையும் வெளியிட்டுள்ளது என்ற அறிவிப்புகளின் பின்னணியில்தான் இந்த முடிவுகள் வருகின்றன.
பெரும்பான்மையான 3,050 ஜில்லா பரிஷத் இடங்களின் தோல்விகள் பாஜகவின் தோல்வி என முறையாகக் கணக்கிடப்படாவிட்டாலும் அது சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் கட்சியின் நம்பிக்கையைத் தூண்டிவிடும். மறுபுறம், மிகப்பெரிய நிர்வாக அதிகாரங்களை அனுபவிக்கும் ஜில்லா பஞ்சாயத்துத் தலைவர்களின் தேர்தலை கட்சி இன்னும் எதிர்நோக்கும்.
இந்த தேர்தல் சமாஜ்வாடி கட்சிக்கு உணர்த்துவது என்ன?
சமாஜ்வாடி கட்சித் தலைவர்கள் பாஜக வேட்பாளர்களை எவ்வாறு அதிக எண்ணிக்கையில் தோற்கடித்தார்கள் என்பது பற்றிப் பேசுகிறார்கள். ஆனால், இந்த வெற்றிகளுக்கு சரியான எண்ணிக்கையை வைப்பதைத் தவிர்க்கிறார்கள். கட்சி அனைத்து வேட்பாளர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. உள்ளூர் தொண்டர்களிடம் வேட்பாளர்களை ஆதரிக்கும் முடிவை விட்டுவிட்டது; பல இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலில் உள்ள கட்சி உறுப்பினர்கள் போட்டியிட தயாராக இருந்தனர். சமாஜ்வாடி கட்சி கணிசமாக முன்னேறியுள்ள நிலையில், அதன் அடுத்த வாக்கெடுப்பில் இந்த எண்ணிக்கையை ஜில்லா பஞ்சாயத்து தலைவர்களுக்கான வெற்றியாக திருப்பும்.
அடுத்தது என்ன?
அனைத்து கட்சிகளும் இப்போது 75 ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவிகளையும் 826 வட்டார பிரமுகர்களையும் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தும். இந்த பதவிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக பாஜக அறிவித்துள்ளது. பாஜக நம்பிக்கையுடன் உள்ளது. ஏனென்றால், பெரும்பாலான அடிமட்ட பிரதிநிதிகள் பாரம்பரியமாக ஆளும் கட்சியுடன் செல்கிறார்கள். பாஜகவின் அடுத்த சவால் சரியான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். மேலும், சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களில் ஏராளமான பாஜக எதிர்ப்பாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. ஆனால், வெற்றி பெற்றுள்ளனர். அத்தகைய, வேட்பாளர்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்க பாஜக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும். ஜில்லா பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு கிராம பஞ்சாயத்துகளின் முன்மொழிவுகளை அங்கீகரிக்கவும், அனுமதிக்கவும், வரி விதிக்கவும், எந்தவொரு கிராம பஞ்சாயத்துக்கும் சட்டங்கள் அல்லது பைலாக்களுக்கு அனுமதி அளிப்பதற்குகூட அதிகாரம் உள்ளது.
source https://tamil.indianexpress.com/explained/uttar-pradesh-panchayat-election-results-bjp-samajwadi-party-bsp-congress-300561/