23 கோடி பேர் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் இயலாமையால், 23 கோடி பேர் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தாம் நடத்திய ஆய்வு குறித்து தகவல்களையும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தை, தான் தொடர்ந்து விமர்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று, கீழ் அடுக்கு நடுத்தர மக்களை எப்படிப் பாதித்திருக்கிறது என்று அறிவுபூர்வமான ஆய்வை வல்லுநரின் துணையுடன் நடத்தியதாகவும் அந்த ஆய்வில் ஆயிரத்து 4 நபர்கள் கலந்து கொண்டதாகவும், கடந்த 14 மாதங்களில் தங்கள் மாத வருமானம் குறைந்திருப்பதாக 880 நபர்கள் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
758 நபர்கள், தங்கள் குடும்பச் செலவு கூடியிருப்பதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், 725 பேர். தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், 329 நபர்கள் தங்கள் உடமைகளை விற்கவோ அல்லது அடமானமோ வைத்திருப்பதாகவும், 702 நபர்கள் கடன் வாங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கீழ் அடுக்கு நடுத்தர மக்கள், ஏழைகளாக மாறிக் கொண்டிருப்பதாக கூறியுள்ள ப.சிதம்பரம், இவர்களுக்கும், இவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதாக கூறியுள்ள ப.சிதம்பரம், இதற்கு மோடி அரசின் இயலாமையும் தவறான கொள்கைகளுமே காரணம் என்ற குற்றச்சாட்டு நியாயம் தானே என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
source https://news7tamil.live/p-chidambaram-says-that-23-crore-people-have-been-pushed-below-the-poverty-line.html