08.06.2021 கருப்பு பூஞ்சை தொற்று சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்க ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். முதல்வர் பொதுநிவாரண நிதியில் இருந்து கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை வாங்க ரூ. 25 கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கும் வகையில் அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்று முதல்வர் சார்பில் தமிழக மக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
https://twitter.com/mkstalin/status/1398624939150692355/photo/1
அதன் விளைவாக 07/06/2021 வரையில் ரூ. 280.20 கோடி நிவாரண நிதி பெறப்பட்டது. இந்த நிதியானது கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே முதல்வர் உறுதி அளித்திருந்தார். அந்த நன்கொடையில் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் மருந்துகளை வாங்கவும், மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தேவையான திரவ ஆக்ஸிஜனை கொண்டு வரவும் ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனையை மேற்கொள்வதற்கு தேவையான ஆர்.டி.பி.சி.ஆர். கிட்களை வாங்க ரூ. 50 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது. சிப்காட் மூலம் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் செறிவூட்டிகள் மற்றும் இதர மருத்துவ கருவிகள் வாங்க ரூ. 41.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவைப்படும் ஆம்போடெரிசின் போன்ற மருந்துகளை வாங்க பொது நிவாரண நிதியில் இருந்து ரூ, 25 கோடியை ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார் முதல்வர்.