05.06.2021 தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி தேர்வு ரத்து என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கடந்த வருடம் ஆரம்பித்த கொரோனா தாக்கம் இப்பொழுது வரை நீங்கவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியவில்லை. கடந்த ஆண்டு பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டனர்.
இந்தாண்டு, 12 ஆம் வகுப்புக்கு மட்டுமாவது தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மார்ச் மாதம் நடத்த இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலை தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக பொறுப்பேற்ற அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என கூறிவந்தார்.
உயர்கல்வி சேர்க்கைக்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் முக்கியம் என்பதால் தேர்வு நடத்தில் அரசு உறுதியுடன் உள்ளதாக தெரிவித்தார். தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் முதல்வர் தலைமையில் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொய்யாமொழி தேர்வு தள்ளிப் போகுமே தவிர, ரத்து செய்ய வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர், அமைச்சரிடம் தொலைப்பேசியில் தேர்வு குறித்து கேட்டபோது கூட, தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசு, மாணவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது. இந்த அறிவிப்பை பிரதமர் மோடி அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பின் வெளியிட்டார்.
இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களும், அவர்களின் வாரியத் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தன.
தமிழகத்தில் தேர்வை ரத்து செய்வது குறித்து பேச்சு எழுந்தபோது, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்டபின் முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
அதன்படி கடந்த இரு தினங்களாக பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலானோர் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அனைத்துக் கட்சி பிரமுகர்களிடம் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிக்கையாக முதல்வர் ஸ்டாலினிடம் இன்று மாலை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். மாணவர்களின் உடல் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையிலே உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-govt-announce-plus-2-exam-cancelled-310998/