10 60 2021 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வந்த நிலையில், கடந்த இரு வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ள நிலையில் வரும் நாட்களில் மேலும் பாதிப்பு எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், ஒரு புறம் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது.
ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்தில், தற்போது 1,060 தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன என்றும், இது சென்னையில் மட்டும் தான், மற்ற 36 மாவட்டங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று தமிழக மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இன்றுவரை 1,01,63,000 டோஸ் தடுப்பூசிகள் மாநிலத்திற்கு வந்துள்ளதாகவும், இதுவரை 97,62,957 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,
கடந்த இரண்டு நாட்களாக, தடுப்பூசிகள் இல்லை என்று அரசு கூறி வருகிறது. மேலும் தற்போதுள்ள தடுப்பூசிகள் குறித்த தகவல்களைப் பகிர வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது, ஆனால் நாங்கள் மக்களுக்கு தகவல் தெரிவிக்காவிட்டால், அவர்கள் தடுப்பூசி மையத்திற்குச் சென்று, ஏமாற்றம் அடைவார்கள். எனவே மக்களிடம் தடுப்பூசி குறித்து உண்மையைச் சொல்வது நல்லது.
ஜூன் மாதத்திற்கு மத்திய அரசு 37 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்துள்ளது, அதில் ஜூன் 13 க்குள் 6.5 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, மாநிலத்திற்கு 85,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி கிடைத்துள்ளது, இதை மாவட்டங்கள் அனைத்திற்கும் விநியோகிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தொற்று பரவுவதைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்குமாறு முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “தமிழகத்தில் தொற்றுநோய் பரவுவது குறைந்து வருகிறது. இதில் நேற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,321 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 31,253 பேர் குணமடைந்து வீடு திரும்பியள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு, மாநிலத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பிய நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, அரசு மற்றும் பிற பொது மருத்துவமனைகளில் 45,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த வைரஸை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம், மக்கள் கோவிட் -19 வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டும், மாநிலத்தில் பாதிப்பு குறைந்து வருவதால் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-36-tamil-nadu-districts-have-no-vaccine-health-minister-312524/