தமிழகத்தில் ஊரடங்கின் பலனாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொடர்ந்து 4 ஆவது நாளாக தொற்று பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடும் பணிகளை அதிகப்படுத்தவும் தமிழக அரசு முனைப்புக் காட்டி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு சுகாதாரத் துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை ஆக்ஸிஜன் செறிவின் அடிப்படையில் மூன்று வகையாக பிரித்து சிகிச்சையை தொடர வேண்டும் என இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டு ஆக்சிஜன் அளவு 94 க்கு கீழ் இருப்போர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட தேவையில்லை. கொரோனா அறிகுறிகளுடன் ஆக்சிஜன் அளவு 94 க்கு கீழ் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, வீட்டு தனிமையில் இருப்போர் ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சல் இருந்தால் பாரசிட்டமல் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். முக்கியமாக, 6 மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்சிஜன் அளவை கண்காணிக்க வேண்டும்.
ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 க்குள் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெறலாம்.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை தர வேண்டும். ஆக்சிஜன் அளவு 90க்கு கீழ் குறைந்துள்ள நோயாளிகளை ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகளில் அனுமதிக்க வேண்டும்.
அனைத்து வகையான கொரோனா நோயாளிகளுக்கும் சாதாரண அறையில் ஆக்சிஜன் அளவு 92 ஆக இருந்தால் மட்டுமே குணமடைந்ததாக கருதப்படுவார்கள். இதே ஆக்சிஜன் அளவு மூன்று நாட்களுக்கு நீடித்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். ஆனால், மூச்சு பயிற்சியை தினமும் வழக்கமாக்கி கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டு தனிமையில் இருப்பவர்கள் உள்பட அனைத்து கொரோனா நோயாளிகளும் குப்புற கவிழ்ந்து படுப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/new-guidelines-for-corona-treatment-tn-health-dept-309626/