01.06.2021 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே போக முடியாது, ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்களின் ஆதரவை தேவை என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.
ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், மே 24 அன்று ஊரடங்கு விதிக்கப்பட்டதிலிருந்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கூறியுள்ளார். உதாரணமாக, சென்னை ஒரு நாளைக்கு 7,000 தொற்றுநோய்களைப் பதிவு செய்து வந்தது, ஆனால் இப்போது இது தினசரி 2,000 பாதிப்புகளாக குறைந்துள்ளது, என்று அவர் கூறியுள்ளார். இதேபோல், கோயம்புத்தூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும். நாம் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே இருக்க முடியாது. இதற்கு நாம் ஒரு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும், இது மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது. நாம் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால், கொரோனா பரவலை முழுமையாக நிறுத்தலாம். மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது, இப்போது மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனுக்கு பஞ்சமில்லை. உண்மையில், பல மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. ஒரே நாளில், நாங்கள் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுகிறோம். வேறு எந்த மாநிலமும் இந்த அளவில் தடுப்பூசி போடுவதில்லை. இதேபோல், ஒரு நாளைக்கு 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன, ”என்று முதல்வர் கூறியுள்ளார்.
வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக இந்த போரில் தன்னை அர்ப்பணித்துள்ளதாகக் கூறிய முதல்வர், “பிபிஇ கிட் அணிந்து, கோயம்புத்தூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கோவிட் வார்டுக்குச் சென்று நோயாளிகளின் உடல்நலம் குறித்து கேட்டேன். கோவிட் வார்டுக்குள் நுழைய வேண்டாம் என்று பலர் எனக்கு அறிவுரை கூறினர், ஏனெனில் அவர்கள் எனது உடல்நிலை குறித்து அக்கறை கொண்டுள்ளனர், ஆனால் மக்களைக் காப்பாற்றுவதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ள ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நம்பிக்கையை வழங்க நான் அங்கு செல்ல விரும்பினேன், ”என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
ஊரடங்கின் காரணமாக, பலர் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டார்கள் என்பது உண்மைதான் என்றும், கொரோனா நிவாரணம் போன்ற முயற்சிகளை பொதுமக்களுக்கு விரிவுபடுத்துவதன் மூலம் நிலைமையை மேம்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் முதல்வர் கூறினார்.
கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ .2,000 ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது தவணை ரூ .2,000 விரைவில் பொதுமக்களை சென்றடையும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். வாகனங்கள் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகளை பொதுமக்களுக்கு தங்கள் வீட்டு வாசலில் வழங்க ஏற்பாடு செய்துள்ளது, ரேஷன் கடைகளை திறக்க அனுமதிப்பது போன்ற கூடுதல் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
“அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும். சிலர் கட்டுப்பாடுகளை மீறினாலும், இந்த அனைத்து நடவடிக்கைகளின் முழு பலனையும் நாம் பெற முடியாது. முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறியதால்தான் இரண்டாவது அலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம், ”என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cannot-keep-extending-the-lockdown-we-must-put-a-full-stop-to-covid-mk-stalin-309588/