ஞாயிறு, 6 ஜூன், 2021

தையல் இயந்திரம் கேட்ட பெண்ணுக்கு உயர்கல்வி படிப்பு

 தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தனது குன்னம் தொகுதிக்குட்பட்ட செந்துறை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நேற்று முன்தினம் கலந்துகொண்டார். அங்கு பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் நிவாரண உதவியை வழங்கினார்.

அப்போது அமைச்சரிடம் வந்த சந்திரா என்ற 18 வயதான இளம்பெண், தான் 12ஆம் வகுப்பு வரை படித்திருப்பதாகவும், தையல் இயந்திரம் கொடுத்தால் அதன்மூலம் வருமானம் ஈட்டி குடும்பத்தை காப்பாற்றுவேன் என்றும் கூறி மனு அளித்தார். மனுவை உடனடியாக படித்துப் பார்த்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “உனக்கு தையல் இயந்திரம் கொடுக்கிறேன், மேற்படிப்புக்கும் உதவி செய்கிறேன். படித்து உங்கள் பகுதி மாணவர்களுக்கு வழிகாட்டனும்” என அறிவுறுத்தினார். இதுதொடர்பாக வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவியது.

செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா. இவரது குடும்பத்தில் பெற்றோர், சகோதரர்கள் 4 பேர், சகோதரிகள் 2 பேர் என மொத்தம் 9 பேர் உள்ளனர். பொம்மைகளை விற்பனை செய்து தங்களது வாழ்க்கையை நகர்த்திவந்துள்ளனர். கடந்த ஆண்டு செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த சந்திரா, அதன்பிறகு 3 மாத தையல் பயிற்சியை முடித்துள்ளார்.

தங்கள் பகுதிக்கு அமைச்சர் வருவது தெரிந்ததால் தையல் இயந்திரம் கேட்டு மனு எழுதியதாகக் கூறிய சந்திரா, “12ஆம் வகுப்பில் கணினி அறிவியல் பிரிவில் 600க்கு 371 மதிப்பெண்கள் பெற்றிருந்தாக மனுவில் குறிப்பிட்டிருந்தேன். நான் உயர்படிப்பு படித்தாலும் திருமணமான பிறகு கணவர் வீட்டில் என்னை வேலைக்கு அனுப்பமாட்டார்கள் என குடும்பத்தினர் கூறினர். அதனால் நான் மேல்படிப்பு படிக்கவில்லை என வீட்டில் கூறிவிட்டேன். வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டுவதற்காக தையல் இயந்திரம் கோரினேன்” என்றார்.


அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, சந்திரா தன்னிடம் மனுவை அளித்தபோது அந்த கையெழுத்து தன்னை மிகவும் கவர்ந்தது என்கிறார். “மனுவை சந்திரா எந்தவித பிழையுமின்றி ஒரு தேர்வு விடைத்தாளை போல சிறப்பாக எழுதியிருந்தார். அதனைப் பார்த்தபிறகுதான் அவரை உயர்கல்வி படிக்க வைக்க முடிவு செய்தேன்” என்று குறிப்பிட்டார் அமைச்சர். தையல் இயந்திரம் கேட்டுச் சென்ற சந்திரா, அமைச்சரின் உதவியால் இப்போது உயர்கல்விப் படிக்கச் செல்கிறார்.


இதற்கு முன்பு இதுபோன்ற நடவடிக்கையால் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தார் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். 2011-16 ஆம் ஆண்டில் இதே தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, செம்பருத்தி என்னும் மாணவி தன்னுடைய ஊரில் நூலகம் கட்டித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று தனது எம்.எல்.ஏ நிதியை ஒதுக்கி கட்டிடம் கட்டித் தந்த சிவசங்கர், அதனை செம்பருத்தி கையாலேயே திறக்க வைத்தது நினைவுகூரத்தக்கது.

source https://news7tamil.live/tn-minister-ss-sivasankar-promise-to-girl-free-sewing-machine-and-higher-education.html