ஞாயிறு, 6 ஜூன், 2021

சமூக ஊடக விதிகளை பின்பற்றுங்கள்; ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி எச்சரிக்கை

 05.06.2021 சமூக ஊடக நிறுவனங்களுக்கான இந்தியாவின் புதிய விதிகளின்படி, இந்திய கிளைகளின் தலைமை பொறுப்புகளுக்கு இந்தியர்களை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசு சனிக்கிழமை ட்விட்டர் நிறுவனத்திற்கு  “ஒரு கடைசி எச்சரிக்கையை” வெளியிட்டது. ஒரு வேளை இந்தியர்களை நியமிக்க மறுத்தால், தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பிற தண்டனை சட்டங்களின் படி “விளைவுகளை” எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசாங்கம் கூறியுள்ளது.

மத்திய அரசுக்கும் சமூக ஊடகங்களுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்திற்கு இதன்மூலம் விதிகளுக்கு உடனடியாக இணங்குவதற்கான கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, ஒருவேளை அந்த நிறுவனம் ஏற்க மறுத்தால், பொறுப்பிலிருந்து விலகுவதற்கான தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் 79 வது பிரிவின் கீழும், மேலும் ஐடி சட்டம் மற்றும் இந்தியாவின் பிற தண்டனைச் சட்டங்களின் படியும் விளைவுகளை ட்விட்டர் நிறுவனம் எதிர் கொள்ள வேண்டி வரும்.”என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சைபர் சட்டத்தின் குழு ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் மகேஸ்வரி கடிதம் எழுதியுள்ளார். பிரிவு 79 என்பது, சமூக ஊடகங்கள் அவர்களின் தளங்களில் இடுகையிடப்பட்ட உள்ளடக்கத்திற்கான சட்ட வழக்குகளில் இருந்து விடுபடும். அவர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணைய சட்டத்தின் குழு ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் மகேஸ்வரி கையெழுத்திட்ட அறிவிப்பில், “அர்ப்பணிப்பு இல்லாமை மற்றும் இந்திய மக்களுக்கு ட்விட்டரில் ஒரு பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சிகள் ஆகியவற்றை செய்ய ட்விட்டர் மறுக்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வந்த போதிலும், ட்விட்டர் நிறுவனம் இந்திய மக்கள் தங்கள் பிரச்சினைகளை சரியான நேரத்தில் மற்றும் வெளிப்படையான முறையில் மற்றும் நியாயமான செயல்முறைகள் மூலம் ட்விட்டரில் தீர்க்க உதவும் வழிமுறைகளை இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்க மறுத்துவிட்டது. இதுபோன்ற ஒரு செயல்முறையை விரைவாக உருவாக்கி விடுங்கள், என ட்விட்டர் நிறுவனத்திற்கு சட்டப்படி  கட்டளையிடப்பட்டாலும் கூட அதை மறுத்து வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரியில் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களின்படி, சமூக ஊடக நிறுவனங்களில் மே 26 க்குள் ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, ஒரு தலைமை இணக்க அதிகாரி மற்றும் ஒரு நோடல் தொடர்பு அதிகாரியை நியமிக்குமாறு அரசாங்கத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிலிருந்து “ப்ளூ டிக்” சரிபார்ப்பு பேட்ஜை ட்விட்டர் நீக்கிய ஒரு நாளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பிற தலைவர்களும் சரிபார்ப்பு பேட்ஜை இழந்தனர்.

பிரதமர் மோடியின் நிர்வாகம் நாட்டில் விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பான விமர்சனங்களை மௌனமாக்க முயற்சிப்பதாகக் கூறப்படும் உள்ளடக்கத்தைத் தடுக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் கேட்டதை அடுத்து பிப்ரவரி முதல் ட்விட்டர் நிறுவனம், இந்திய அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, இந்தியா புதிய விதிகளை அறிவித்தது. அதில் இது சமூக ஊடக நிறுவனங்களில் பதிவிடப்படும் தேவையற்ற கருத்துக்களை சட்ட விதிகளின் படி விரைவாக அகற்ற வேண்டும் மற்றும் புகார்களைக் கையாள ஒரு இந்திய குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த மாதம், பாஜக தலைவர்கள் “திசைதிருப்பப்பட்ட ஊடகங்கள்” என்று ட்விட்டரை வகைப்பாடு செயத பின் அரசாங்கத்திடமிருந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினர் தேசிய தலைநகரில் உள்ள அதன் அலுவலகங்களை பார்வையிட்ட பின்னர், கருத்துச் சுதந்திரம் மற்றும் இந்தியாவில் அதன் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து ட்விட்டர்  நிறுவனம் பேசுவதற்கு இந்த சர்ச்சை வழிவகுத்தது.

source https://tamil.indianexpress.com/india/centre-issues-one-last-notice-to-twitter-over-compliance-of-social-media-rules-310979/