ஞாயிறு, 6 ஜூன், 2021

வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்; விவசாய சங்கங்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

 

06.06.2021 TamilNadu Farm Budget 2021-2022 Farmers Associations Requests and Demands : தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெரும்பாண்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைத்த நாள் முதல் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் திமுக அரசு, தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்ட திட்டங்களையும் மும்முறமாக செயல்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது புதிதாக அமைந்துள்ள திமுக அரசு நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகிறது.

இதனிடையே, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட திட்டமான விவசாயத்திற்கு தனி பட்ஜெட் தற்போது பேசு பொருளாகி உள்ளது. விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ள நிலையில், மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தெரிய வருகிறது. விவசாய பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக உற்பத்தியை பெருக்குவது, விவசாயிகள் நலனை பாதுகாக்கும் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், வேளாண் துறை மீது தனிக் கவனம் செலுத்தப்படும். இந்த சூழலில், இது குறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம்.

இந்தியாவுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு தனியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், மத்திய அரசு இந்த நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டாவில்லை. ஆனால், தற்போது தமிழகத்தில் அமைந்திருக்கக் கூடிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் விவசாய சங்கங்களோடு சேர்ந்து மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட்டை வலியுறுத்தி வந்தது. இந்த சூழலில், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என விவசாயிகளும், விவசாய சங்கங்களும் ஆவலோடு காத்திருக்கின்றோம்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்

விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், சாகுபடி பரப்பளவு உயரும். விளை பொருள்களுக்கான சந்தை வசதி முறைப்படுத்தப்படும். லாபகரமான விலைக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். மகசூல் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைக்கும். பாரம்பரிய விவசாய முறைகள் மேம்படுத்துவதற்கான தனி திட்டங்கள் வகுக்கப்படும். வேளாண்மை தொழிலை இலாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உணவு தானியங்களுன் தேவையும் அதிகரித்துள்ளது. வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், தமிழகத்திற்கு தேவையான உணவு தானியங்கள் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யும் நிலை ஏற்பட்டு, தன்னிறைவை அடையும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் சுமார் 45 லட்சம் ஹெக்டேர் நிலம் விளை நிலமாக உள்ளது. வேளாண்மைக்கென தனி பட்ஜெட் உருவாக்கப்பட்டால், தரிசு நிலங்கள் மேம்பாடடைந்து, விளை நிலங்களின் பரப்பளவு அதிகரிக்கும். மண்ணுக்கு ஏற்ற வேளாண் பயிர் முறைகளை பின்பற்ற வாய்ப்பு ஏற்படுத்தப்படும். பருவகாலங்களுக்கு ஏற்ற பயிர் முறைகளை பின்பற்ற திட்டங்கள் வகுக்கப்படும். விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்த நிலையில், வேளாண் இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், அவை வாடகை முறையில் கிடைத்திடவும் உழவர்களுக்கு வழுவகை செய்யப்படும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதன் மூலம், வேளாண் பட்டத்தாரிகளின் எண்ணிக்கையை ஊக்குவிக்க வேண்டும். வேளாண் கல்லூரிகளை அதிகப்படுத்த வேண்டும். துவக்கப் பள்ளி பாடத்திட்டங்கள் முதல் வேளாண்மையை பாடமாக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆட்சியில், விவசாயிகளுக்கு எதிரான சில திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டும், அமலிலும் இருந்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு, வேளாண்மையையும் தொழில் வளர்ச்சியையும் இரு கண்களாக பார்க்க வேண்டும். வேளாண் உற்பத்திக்கு பாதிப்பு இல்லாமல், சிறு குறு விவசாயிகள் நலமும் வாழ்வாதாரமும் பாதிப்டையாமல், மாற்றுத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக கொள்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது தொடர்பான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தொழிற்சாலைகள் அமைவதை ஊக்குவிக்க முடியாது. மாவட்டங்களில் விளை நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் விடுத்து, வறட்சியான இடங்களில் பரவலாக வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கப்படும் நோக்கில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கிறோம். காய்கறி, பழங்களை சந்தைப்படுத்த அதிகப்படியான உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை போல், நெல், கரும்பு ஆகியவற்றுக்கும் முறையான சந்தைப்படுத்தும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தமிழகத்திற்கு தேவையான சர்க்கரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூழலில், தமிழகத்தில் மூடப்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முறைப்படுத்தி செயல்பட வழிவகை செய்யப்பட வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியில், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யவும், நீர் பாசனத்திற்கு தனித் துறை அமைக்கவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், அதிமுக அரசு அனைத்தையும் நிராகரித்து வந்தது. தற்போது, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்துள்ளது. அதே போல, வேளாண்மை மட்டுமில்லாமல் உழவர் நலனை கருத்தில் கொண்டும் உழவர் நலத்துறையை திமுக அரசு ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பருவநிலை மாற்றங்கள் தொடர்பான தனித் துறையையும் தற்போது உருவாக்கி உள்ளது. மேலும், விவசாயிகளுக்கான மாநில அளவிலான ஆலோசனை குழுவினை உருவாக்க, தற்போதைய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்’ என்றார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-budget-dmk-stalin-agricultural-budget-2021-2022-farmers-association-requests-3110/