புதன், 1 செப்டம்பர், 2021

வாகன பதிவு எண் முறையில் புதிய மாற்றம் அறிமுகம்… பி.எச். சீரிஸ் என்றால் என்ன?

 BH series registration plates for vehicles: ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடம் பெயரும் போது, வாகனங்கள் அல்லது இருசக்கர வாகனங்களை மாற்றுவது பெரும் பிரச்சனையாக இருக்கும். தற்போது நீங்கள் இருக்கும் மாநிலத்தில் இருந்து என்.ஒ.சி. சான்றினை பெற வேண்டும். எந்த மாநிலத்தில் தங்க போகின்றீர்களோ அங்கே மறுபடியும் வாகனத்தை பதிவு செய்ய வேண்டும். சாலை வரியை மீண்டும் கட்ட வேண்டும்.

இந்த அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் உரிமையாளர்களை விடுவிக்கும் பொருட்டு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பாரத் தொடர் “பிஹெச்” சீரிஸ் பதிவை மக்கள் தேர்வு செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

அடிக்கடி பணிமாற்றம் அடையக் கூடிய பணிகளில் வேலை பார்க்கும் ராணுவம், ரயில்வே, மற்றும் இதர அரசு ஊழியர்கள், பல்வேறு மாநிலங்களில் தங்களின் நிறுவனங்களைக் கொண்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் இது போன்ற காலங்களில் நீண்ட நேரம் சான்று சரி பார்ப்பு மற்றும் இதர நடைமுறைகளை எதிர்கொள்கின்றனர். தற்போது அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த முறையானது பல்வேறு குழப்பங்களை நீக்க உதவும்.

தற்போது நிலுவையில் உள்ள அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?

தற்போது, ​​ஒரு நபர் வேறொரு மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து, அவருடன் தனது வாகனத்தை எடுத்துச் செல்ல விரும்பும் போது, ​​அவர் முதலில் வாகனம் பதிவுசெய்யப்பட்ட மாநிலத்திலிருந்து தடையில்லா சான்றிதழை வாங்க வேண்டும். இது வாகனத்தின் தாய் மாநிலம் என்று வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில் வாகனத்தை பதிவு செய்ய இந்த தடையில்லா சான்றிதழ் மிகவும் அவசியம் ஆகும்.

புதிய மாநிலத்தில் வாகனம் பதிவு செய்யப்படும் வரை, மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 47-ன் கீழ் மற்றொரு மாநிலத்தில் அதே வாகன பதிவு எண் கொண்டு 12 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும். விகிதாச்சார அடிப்படையில் பெற்றோர் மாநிலத்தில் சாலை வரியை திருப்பித் தரவும் விண்ணப்பிக்க இயலும்.

ஒருவர் தன்னுடைய சொந்த வாகனத்தை வாங்கும் போது, அவர் எங்கே வாகனம் வாங்குகின்றாரோ, அந்த மாநிலத்திற்கு, வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட வாழ்நாள் முழுவதுக்குமான சாலை வரியை 15 வருடங்களுக்கு முன்பே கட்டிவிட வேண்டும்.

தற்போது அந்த வாகனம் ஐந்து வருடங்கள் கழித்து வேறொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றால், சொந்த மாநிலத்தில் கட்டப்பட்ட சாலை வரியில் 10 ஆண்டிற்கான சாலை வரியை திருப்பி செலுத்த வேண்டும். புதிய மாநிலத்தில் வாகனத்தின் ஆயுளில் மீதம் இருக்கும் ஆண்டுகளுக்கான, அதாவது 10 வருடங்களுக்கான சாலை வரியை கட்ட வேண்டும்.

தாய் மாநிலத்திடமிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான இந்த ஏற்பாடு மிகவும் சிக்கலான செயல்முறையாகும் மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும் என்பதை அரசாங்கம் இறுதியாக உணர்ந்தது. பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களின் அதிகாரத்துவ பிரமை வழியாக ஒருவர் செல்ல வேண்டும் மற்றும் பல தடைகளை இதனால் சந்திக்க நேரிடும்.

மீதமுள்ள சாலை வரி ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றப்படும் ஒரு அமைப்பை மத்திய மாநில அரசுகள் இன்னும் கொண்டு வரவில்லை.

புதிய அமைப்பு எவ்வாறு செயல்படும்?

தற்போது நடைமுறையில் இருக்கும் சிக்கல்கள் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் உரிமையாளர்கள் நேரடியாக ஆன்லைனில் பி.எச். சீரிஸிற்காக விண்ணப்பம் செய்யலாம். செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது.

மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989 பிரிவு 47ன் கீழ் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் பிஎச் பதிவு கொண்ட வாகனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டவுடன் புதிய மாநிலத்தில் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த வசதியை பெற தகுதியானவர்கள் யார்?

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் எந்த ஒரு நபரும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களே. நான்குக்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிறுவனங்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் இந்த புதிய பதிவு எண் அடிப்படையில் தங்களின் வாகனங்களை பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு அவர் விண்ணப்ப எண் 60-ஐ பூர்த்தி செய்து, தேவையான அடையாள சான்றுகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். மாநில அரசு அதிகாரிகள் அந்த சான்றுகளை சரிபார்த்த பிறகு அந்த வாகனத்திற்கு பி.எச். பதிவு எண்களை வழங்குவார்கள். இந்த எண்கள் கணினி மூலம் உருவாக்கப்படும் எண்களாகும்.

வரி பிரச்சனை சரி செய்யப்படுமா?

பி.எச். முறையில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டால் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே சாலை வரி வசூலிக்கப்படும். 15 ஆண்டுகளுக்கு மொத்தமாக சாலை வரி வசூலிக்கப்படுவதற்கு பதிலாக ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் வரி வசூலிக்கப்படும். வரியை முன்பணமாக உரிமையாளர் செலுத்தவில்லை என்பதால் அவர் மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கு முன்பும் பின்பும் அலைய வேண்டாம். பதினான்காம் ஆண்டு நிறைவடைந்த பிறகு, மோட்டார் வாகன வரி ஆண்டுதோறும் விதிக்கப்படும், இது அந்த வாகனத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட தொகையில் பாதியாக அது இருக்கும்.

சாலை வரி எவ்வளவு இருக்கும்?

பி.எச். வாகனத்திற்கான சாலை வரியானது 8% ஆக இருக்கும். வாகனத்தின் விலை ரூ. 10 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால் இந்த வரி வசூலிக்கப்படும். 10 முதல் 20 லட்சம் வரையில் இருந்தால் சாலை வரி 10% சாலை வரி வசூலிக்கப்படும். அதே போன்று வாகனம் ரூ. 20 லட்சத்திற்கு மேல் இருந்தால் 12% வரை வரி வசூலிக்கப்படும். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பல பரிந்துரைகளைப் பெற்றதுடன், இந்த அறிவிப்பை கொண்டு வருவதற்கு முன்பு மாநிலங்களுடன் கலந்துரையாடியது. டீசல் வாகனங்களுக்கு 2 சதவீதம் கூடுதலாகவும் மின்சார வாகனங்களுக்கு 2 சதவீதம் குறைவாகவும் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை வரி வசூலிக்கப்படுவது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும், ஆனால் இது எப்படியும் பெரிய அளவில் உள்ளது.

பி.எச். பதிவு எண் எப்படி இருக்கும்?

ஒரு பொதுவான பி.எச், பதிவு எண் “21 BH XXXX AA” என்று இருக்கும். முதல் இரண்டு இலக்கங்கள் எந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டது என்பதை குறிக்கும். பி.எச். என்பது இந்த கோடு. அதனை தொடர்ந்து வரும் நான்கு இலக்க எண்கள் கணினிகளில் தோராயமாக உருவாக்கப்படும் எண்களாகும். அதனை தொடர்ந்து இரண்டு இலக்கங்களில் ஆங்கில எழுத்துகள் இருக்கும்.

source https://tamil.indianexpress.com/explained/what-is-the-new-bh-series-registration-plates-for-vehicles-337345/