01 09 2021
தலிபானுடனான முதல் அதிகாரப்பூர்வ தொடர்பில், கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் செவ்வாய்க்கிழமை தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தலிபான் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்சாயை சந்தித்தார்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இன்று, கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல், தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் தலைவர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டான்க்ஸாயை சந்தித்தார். தாலிபான் தரப்பின் வேண்டுகோளின் பேரில் தோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த விவாதத்தில், ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு, காவல் மற்றும் முன்கூட்டியே நாடு திரும்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் பிரஜைகள், குறிப்பாக இந்தியாவுக்கு வர விரும்பும் சிறுபான்மையினரின் பயணமும் அதில் விவாதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் மண்ணை இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்ற இந்தியாவின் கவலையை தூதர் மிட்டல் எழுப்பினார்.
இந்த பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டு தீர்க்கப்படும் என்று தலிபான் பிரதிநிதி இந்திய தூதரிடம் உறுதியளித்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் வளர்ந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், என்.எஸ்.ஏ அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு இந்தியாவின் உடனடி முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த குழு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சந்தித்து வருகிறது. ஆப்காணிஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக திரும்புவது, ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் (குறிப்பாக சிறுபான்மையினர்) இந்தியாவுக்கு பயணம் செய்வது, ஆப்கானிஸ்தான் பிரதேசம் இந்தியாவுக்கு எதிராக இயக்கப்பட்ட பயங்கரவாதத்திற்குப் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்தல் போன்ற பிரச்னைகளை விவாதித்தது.
இந்த குழு ஆப்கானிஸ்தானின் கள நிலவரத்தையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட சர்வதேச எதிர்வினைகளையும் கண்காணித்து வருகிறது.
source https://tamil.indianexpress.com/india/india-officially-talks-with-taliban-discusses-safety-evacuation-terrorism-337572/