16 09 2021நீட் தேர்வு தோல்வி பயத்தால் செங்கல்பட்டு-ஐ சேர்ந்த 17 வயது மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவர் சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிபா மாடம்பக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் அனு சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
மருத்துவ படிப்பில் சேர விரும்பிய அனு கடந்த 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ஆவடி நீட் தேர்வு மையத்தில் எழுதியுள்ளார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதிய இவர், தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து, மாணவி அனு 40 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி அனுவை, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஏற்கனவே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா ஆகியோர், இந்தாண்டு நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது, மாணவி அனு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chengalpattu-student-attempted-suicide-for-fear-of-failing-neet-exam-342227/