திங்கள், 4 அக்டோபர், 2021

7.5% உள் இடஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது

 பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் எந்தவித கட்டணமும் வசூலிக்கக்கூடாது என கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொறியியல் மற்றும் வேளாண் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறைவாக இருப்பதன் காரணங்களை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் தமிழ்நாடு அரசு ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% உள் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.

விவாதத்திற்குப் பிறகு சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேறியது.7.5% உள் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதற்கான சேர்க்கை ஆணைகளை வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களின் பொறியியல் கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தெரிவித்தார்.

இதனிடையே பொறியியல் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் மாணவர் சேர்க்கையின் போது கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

source https://news7tamil.live/7-5-percentage-reservation-fees-should-not-be-collected-from-students.html