வெள்ளி, 8 அக்டோபர், 2021

உலகின் முதல் மலேரியா தடுப்பூசி ‘மாஸ்க்ரிக்ஸ்’ – 8 லட்சம் குழந்தைகள் மீது பரிசோதனை!

 உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 4 லட்சம் உயிர்களைப் பறிக்கும் மலேரியா நோய்க்கு எதிராக முதல் தடுப்பூசியை உலக சுகாதார மையம் அங்கீகரித்துள்ளது. ‘மாஸ்க்ரிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, முதற்கட்டமாக மலேரியா தாக்கம் அதிகம் உள்ள ஆப்ரிக்க நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆப்பிரிக்க நாட்டு குழந்தைகளிடையே நடத்திய சோதனையில், இந்த தடுப்பூசி மலேரியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது உறுதியாகியுள்ளது. இந்தத் தடுப்பூசியை ஜிஎஸ்கே மருந்து நிறுவனம் (GSK pharmaceutical company) நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்ட சோதனையில், சராசரியாக இந்த மருந்தின் நான்கு டோஸ்களை பெற்ற 10 குழந்தைகளில் 4 பேர் குணமாகியுள்ளனர்.

இந்த தடுப்பூசி மூன்று நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர்களால் முதன்முறையாக, குழந்தை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

2019 முதல் கானா, கென்யா, மலாவி ஆகிய நாடுகளில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலகளவில் கொடிய நோய் மலேரியா

மலேரியா நோய், பெண் அனோபிலிஸ் கொசுக்களின் கடி மூலம் மக்களுக்கு பரவுகிறது.உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் இந்த நோயை, சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.

இருப்பினும், 2019 ஆம் ஆண்டில், உலகளவில் 229 மில்லியன் மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 9 ஆயிரமாக உள்ளது.

மலேரியாவால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். 2019இல் உயிரிழந்தோரில் 67 விழுக்காடு(2 லட்சத்து 74 ஆயிரம்) பேர் குழந்தைகள் ஆவர்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் 5.6 மில்லியன் மலேரியா நோயாளிகள் இருந்த நிலையில், 2020 இல் 20 மில்லியனாக அதிகரித்துள்ளது.

4 டோஸ் தடுப்பூசி

இந்த RTS,S/AS01 தடுப்பூசி, மிதமான முதல் அதிகளவில் பரவ வாய்ப்புள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு முதலில் செலுத்தப்படவுள்ளது. இந்த தடுப்பூசி 5 மாத குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் நான்கு டோஸ்களாக வழங்கப்படவுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ள மலேரியா தடுப்பூசி, அடுத்தகட்டமாக உலகளாவிய விநியோகத்திற்கு அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்படும். இந்தத் தடுப்பூசியின் அறிமுகம், மலேரியா தடுப்பு நடவடிக்கைகளில் மிகப்பெரிய மைல்கல் ஆகும்.

மலேரியாவை வென்ற நாடுகள்

உலகளவில், மலேரியா நோயை பல நாடுகள் வெற்றிகரமாக வென்றுள்ளது. 2019இல், 27 நாடுகளில் 100க்கும் குறைவாகவே மலேரியா பாதிப்புகள் பதிவாகியிருந்தது. இந்த பட்டியலில், 2020இல் கூடுதலாக 6 நாடுகள் இணைந்தன.

மலேரியாவால் எவ்வித பாதிப்பும் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் பதிவாகாத நாடுகள், மலேரியா ஒழிப்புக்கான WHO சான்றிதழுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவை ஆகும்.

கடந்த இரண்டு தசாப்தங்களில், 11 நாடுகளுக்கு WHO டைரக்டர் ஜெனரலால் மலேரியா இல்லாத நாடு என்ற சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளன. அவை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2007), மொராக்கோ (2010), துர்க்மெனிஸ்தான் (2010), ஆர்மீனியா (2011), இலங்கை (2016), கிர்கிஸ்தான் (2016), பராகுவே (2018), உஸ்பெகிஸ்தான் (2018), அல்ஜீரியா (2019), அர்ஜென்டினா (2019) மற்றும் எல் சால்வடார் (2021) ஆகும்.


source https://tamil.indianexpress.com/explained/mosquirix-first-malaria-vaccine-got-who-recognition/

Related Posts: