Lakhimpur Kheri incident : லக்கிம்பூர் வன்முறையின் மத்தியில் அதிகம் பேசப்பட்ட மத்திய உள்துறை இணை அமைச்சராக பணியாற்றும் அஜய் மிஸ்ரா (டேனி) மிகவும் சமீபத்தில் தான் மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்டார்.
பிராமணரான மிஸ்ரா மட்டுமே சமீபத்திய அமைச்சரவை விரிவாகத்தின் போது மத்திய அமைச்சரவையில் இணைக்கப்பட்ட உ.பி.யில் இருந்து தேர்வான நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். லக்கிம்பூர் கேரியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
நடைபெற இருக்கும் உ.பி. தேர்தலில், பிராமணர்களின் வாக்குகளை பெற ஒவ்வொரு கட்சியினரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பாக பிராமணர்களுக்கு எதிரான சார்பை பாஜக கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வரும் சூழலில் மிஸ்ரா உள்துறை இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
1960ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி அன்று லக்கிம்பூர் கேரியில் பிறந்த அவர் கான்பூரில் உள்ள க்றிஸ்ட் சர்ச் கல்லூரி மற்றும் டி.ஏ.வி. கல்லூரியில் படித்தார். பி.எஸ்.சி. மற்றும் எல்.எல்.பி. பட்டதாரி ஆவார்.
மிஸ்ரா 2014ம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பி.எஸ்.பி. கட்சி வேட்பாளரை விட 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அவர். 2019ம் ஆண்டு அவரின் வாக்கு வித்தியாசம் இரட்டை மடங்கானது. 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.பி. வேட்பாளரை தோல்வி அடைய செய்தார்.
2012ம் ஆண்டு நிகாசன் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெறுவதற்கு முன்பு லக்கிம்பூர் பாஜக அலுவலகத்தில் மிஸ்ரா பணியாளராக இருந்தார் என்று கட்சிப் பணியாளர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.
2014 ஆம் ஆண்டு முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக மிஸ்ரா தேர்வு செய்யப்பட்ட போது அவர் பல்வேறு நாடாளுமன்ற கமிட்டிகளில் உறுப்பினராக பணியாற்றினார். ஊரக மேம்பாட்டுத்துறையின் நிலைக்குழு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு, அலுவல் மொழி நாடாளுமன்றக் குழு , நுகர்வோர் விவகாரம் மற்றும் பொதுவிநியோகத்துறையின் நிலைக்குழு, உணவுப்பதப்படுத்துதல் தொழிற்சாலை துறையின் ஆலோசனைக் குழுவில் அவர் உறுப்பினராக பணியாற்றினார்.
ஞாயிறு அன்று நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் மூன்று வாகனங்கள் மோதியதில் உயிரிழந்தனர். அந்த மூன்று வாகனங்களில் ஒன்று அஜய் மிஸ்ராவிற்கு சொந்தமானது. விவசாயிகள் பலரும் அஜயின் மகன் ஆஷிஷ் தான் வண்டியை இயக்கினார் என்று கூறுகின்றனர்.
திங்களன்று, ஆஷிஷ் மீது கொலைக் குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
தன்னுடைய மகன் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இல்லை என்று அஜய் கூறியுள்ளார். தன்னுடைய மகன் குறித்து பேசிய அவர், இந்த நிகழ்வு எப்படி அரங்கேறியது என்று எங்களுக்கு தெரியவில்லை. கிடைத்த தகவல்கள் மற்றும் வீடியோக்கள் அடிப்படையில், விபத்திற்கு பிறகு அந்த காரை ஓட்டி வந்த நபர் காரை விட்டு வெளியேற்றப்பட்ட போது இறந்தார். அது என்னுடைய மகனாக இருக்கும் போது அவர் நிச்சயமாக இறந்து தான் இருப்பார். ஆயிரக் கணக்கானோர் கூடி இருக்கும் ஒரு இடத்தில் இருந்து தப்பிப்பது நிச்சயமாக சாத்தியமற்றது என்று அவர் கூறினார். இந்த விவகாரம் நடைபெற்ற பிறகு புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதியில் உள்ள அமைச்சகத்தில் தன்னுடைய பணிகளை அவர் மேற்கொண்டார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 40 நிமிடங்கள் பேசிய அவர் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வன்முறை மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து விவரித்தார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய அலுவலகத்தில் இருந்த போதும் துறைச் செயலாளார் மற்றும் இதர அலுவலர்களுடன் தான் பேசினார். துறைசார் கூட்டங்கள் எதையும் அவர் நடத்தவில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார்.
source https://tamil.indianexpress.com/explained/who-is-ajay-mishra-union-mos-at-centre-of-lakhimpur-kheri-incident-352342/