பாமகவின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்ததற்கு காரணம் ஆதிக்க மனநிலையை கடைபிடிக்கும் அன்புமணிதான் என்று திமுக எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
பாமக வலுவாக இருக்கும் தருமபுரி மாவட்டத்தில் மூத்த பாமக நிர்வாகிகள் பலரும் திமுக எம்பி செந்தில்குமார் ஏற்பாட்டின் பேரில் திமுகவில் இணைந்துள்ளனர். இதனால், தருமபுரி மாவட்ட பாமக ஆட்டம் கண்டுள்ளது.
பாமகவில் தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அ. சத்தியமூர்த்தி தலைமையில் பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில், பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் – ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு, அரூர் பேரூர்ச் செயலாளர் கி. அய்யப்பன், அரூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர்ச் செயலாளர் சபரி, லட்சுமணன் ஆகியோர் அ.சத்தியமூர்த்தி தலைமையில் 25க்கும் மேற்பட்ட திமுகவில் இணைந்தனர். இந்த சம்பவம் பாமகவை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “அங்கே கூனிக் குறுகி இருப்பவர்களுக்குதான் வேலை. நேர்மையாக இருப்பவர்களுக்கு வேலை இல்லை. சமீபத்தில் நடந்த அன்புமணி மகள் திருமணத்தில் மேடையில் ஒரு கட்சி நிர்வாகி கூட போக முடியாது. பாட்டாளிகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சியில் இவ்வளவு ஆதிக்கம் இருக்கிறது. அவர்கள் சமூகநீதியைக் கடைபிடிப்பதில்லை. ஒரு நிர்வாகிகூட அவர்களுடன் மேடையில் நிற்கமுடியாது. அவர்களை கீழே வரிசையில் இருக்க வைத்து அனுப்புகிறார்கள். வன்னியர்கள் யாரும் பொருளாதார ரீதியாக முன்னேறவில்லை. ஆனால், இவர்கள் வளர்ந்துவிட்டார்கள்.” என்று கூறினர்.
உங்களை தூண்டிவிட்டு அரசியல் லாபத்துக்காக அறுவடை செய்தார்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாமக நிர்வாகிகள், “ஆமாம் பனியன் போட்டுக்கொண்டு சுற்றினோம். இன்னும் அவர்கள் வெட்டுடா குத்துடா என்ற காரணத்துக்காகத்தான் வைச்சிருக்காங்க. இளைஞர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ருத்தர தாண்டவம் படத்துக்காக 30,000 ரூபாய் டிக்கெட் வாங்கி கொடுக்கணும் என்று பயங்கர கலாட்டா அடிதடி” என்று கூறினார்.
தருமபுரி எம்.பி செந்தில்குமார், பாமக நிர்வாகிகள் ஊடகங்களிடம் பேசிய வீடியோவை பகிர்ந்து, அதில் பாமக நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததற்கு காரணம் கட்சியில் அன்புமணி கடைபிடிக்கும் ஆதிக்க நிலையே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி செந்தில்குமார் அந்த பதிவில் கூறியிருப்பதாவது: “பாமக கட்சி தோழர்களிடமே ஆதிக்கநிலையை கடைபிடிக்கும் அன்புமணி கட்சிக்குள் சமூகநீதி என்றால் என்ன?- என்ற நிலை.
அன்புமணி அவர்களுக்கும் பாமக கட்சி தொண்டர்களுக்கும் எட்டமுடியாத இடைவெளியை அவரே உருவாக்கியதுதான் தோழர்களின் மன வருத்ததிற்கான மிக முக்கியமான காரணம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாமகவில் இருந்து வெளியே திமுகவில் இணைந்த தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள் தாங்கள் பாமகவில் இருந்து வெளியேறியதற்கு காரணம் அன்புமணியின் ஆதிக்க நிலையே காரணம் என்று குற்றச்சாட்டு வைத்திருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/pmk-dharmapuri-district-functionaries-joins-into-dmk-and-they-blames-anbumani-352041/