ஞாயிற்றுக்கிழமை அன்று லக்கீம்பூர் கேரியில் நடைபெற்ற வன்முறையில் பத்திரிக்கையாளர் ராமன் கேஷ்யாப் எவ்வாறு உயிரிழந்தார் என்ற தகவல்களை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் இந்த இறப்பு குறித்து புகார் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்றும், பிரேத பரிசோதனை முடிவுகளை தரவில்லை என்றும் அவருடைய குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆனால், திகுனியா பகுதியில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனம் மோதி உயிரிழந்த நபர்களில் ராமனும் ஒருவர் என்று அவர் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மூலம் கூற முடியும். அமைச்சர் மகன் ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்த 8 நபர்களில் 4 பேர் விவசாயிகள் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மற்ற 4 நபர்களில் ராமனும் ஒருவர்.
32 வயதான ராமனின் சகோதரர் பவான் இது குறித்து கூறிய போது, சில செய்தித் தொலைக்காட்சிகள் நடந்ததை திரித்துக் கூறுகின்றன என்று குறிப்பிட்டார். வைரலாகி வரும் அந்த வீடியோவே, என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறுகிறது. கார்கள் மோதியதில் தான் அவர் இறந்தார். அவருடைய உடலில் கார் சக்கரத்தின் அச்சு பதிவாகியுள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் மீது அமைச்சர் மகனின் கார் மோதியதில் உயிரிழந்தார் என்று பவன் தெரிவித்தார். ஆரம்பத்தில் இருந்தே எங்கள் அறிக்கையும் தெளிவாகவே உள்ளது. ஆனால் சில செய்தி நிறுவனங்கள் அதனை மாற்ற முயற்சி செய்கின்றன என்றும் அவர் கூறினார்.
விவசாயியான ராமனின் தந்தை ராம் துலரே நிகாசன் காவல் நிலையத்தில் இது தொடார்பான புகாரை எழுத்துப்பூர்வமாக திங்கள் கிழமை கொடுத்தார். அந்த புகாரில், தன்னுடைய மகன், அமைச்சர் மகன் ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்தார் என்றும், தன்னுடைய மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். நேரடியாக இந்த நிகழ்வை பார்த்த சாட்சியங்கள், கார் வருவதை ஊடகவியலாளர் பதிவு செய்து கொண்டிருந்த போது அவர் சுடப்பட்டதாக கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக வெளியான வீடியோவில் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்கிறது என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
நிகாசன் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய போது, அந்த புகார் திகுனியா காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்க் தான் வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறும் என்று கூறினார் நிகாசன் எஸ்.எச்.ஓ. ராம் லக்கான்.
நான்கு பேருக்கு அப்பாவான ராம் துலரே, ராமனின் உடலில் கார் ஏறிச் சென்றதுக்கான தடயங்கள் உள்ளது என்று கூறினார். அவருடைய உடலில் கற்களும் இருந்தன என்றும் அவர் கூறினார். விவசாயிகளுக்கு ஆரம்பம் முதலே நாங்கள் ஆதரவை வழங்கி வந்தோம் ஏன் என்றால் நாங்களும் விவசாயிகள் தான். என்னுடைய மகன் முதலில் விவசாயி பிறகு தான் அவர் பத்திரிக்கையாளர் என்று குறிப்பிட்டார்.
தந்தை, உடன் பிறந்தோர் மட்டுமின்றி, ராமனுக்கு ஆராதனா என்ற மனைவியும், 11, 3 வயதில் இரண்டு குழந்தைகளும் உள்ளன. புதன்கிழமை மாலை செய்தியாளர்கள் ஆராதனவை சந்திக்க முற்பட்டபோது, கேமராக்கள் இறந்து போன தன்னுடைய கணவனை ஞாபகப்படுத்துகிறது என்று கூறி பேச மறுத்துவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்றார் ராமன். அவருடைய போன், வன்முறைக்கு பிறகு ஸ்விச் ஆஃப் ஆகவும் நாங்கள் மிகவும் கவலை அடைந்தோம். அடுத்தநாள் காலை காவல் நிலையத்தில் இருந்து வந்த அழைப்பில், ஒரு சடலத்தை அடையாளம் காண வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் அங்கே சென்று பார்த்த போது அது அவருடைய உடல் என்று தெரியவந்தது என்று கூறினார் பவன்.
புதன்கிழமை அன்ற் உள்ளூர் எஸ்.டி.எம்., அரசு தரப்பில் ரூ. 45 லட்சம் குடும்பத்திற்கு வழங்கியது. ஆராதனாவிற்கு அரசு வேலை வழங்க வேண்டும் அப்போது தான் அவர், அவருடைய குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள முடியும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
என் அண்ணன் விரும்பியதைப் போன்றே அரசு, பத்திரிக்கையாளர்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார் பவன். இந்த அரசு நீதியை உறுதி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறிய அவர், மற்றவர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்று அமைச்சர் மீதும் அவர் மகன் மீதும் எடுக்கப்படுகிறதா என்று பார்ப்போம் என்றும் பவன் தெரிவித்தார்.
source https://tamil.indianexpress.com/india/lakhimpur-kheri-violence-journalist-raman-kashyap-got-killed-352334/