ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி ஸ்வீப் செய்து மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில், திமுக கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் கிடைத்துள்ளன என்பதை இந்த செய்தி அலசுகிறது.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முதல் திமுக – காங்கிரஸ் – சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக கட்சிகளின் கூட்டணி தொடர்ந்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்த கூட்டணி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. இடங்கள் ஒதுக்கீடு செய்வதில் திமுக கறாராக நடந்துகொண்டதாக கூட்டணி கட்சிகள் முணுமுணுத்தன. இருப்பினும், திமுக ஒதுக்கிய இடங்களை ஒப்புகொண்டு தேர்தலை சந்தித்தன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஸ்வீப் செய்துள்ளது.
மாவட்ட கவுன்சிலர்கள் மொத்தம் 140 இடங்களில் இதுவரை மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டபடி, திமுக – 95 இடங்களிலும் காங்கிரஸ் – 7 இடங்களிலும்
அதிமுக – 1 இடத்திலும் மற்றவை – 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கான முடிவுகள் இன்னும் பதிவேற்றப்படவில்லை.
இதனால், மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தல் முடிவில் காங்கிரஸ் கவுரவமான வெற்றியை பெற்றுள்ளது என்றே கூறலாம். ஏனென்றால், எதிர்க்கட்சியான அதிமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதே போல, மொத்தம் 1381 ஒன்றிய கவுன்சிலர்கள் இடங்களில் இதுவரை மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டபடி, திமுக – 749 இடங்களிலும் காங்கிரஸ் – 24 இடங்களிலும் சிபிஎம் – 4 இடங்களிலும் சிபிஐ -2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களுக்கான முடிவுகள் இன்னும் பதிவேற்றப்படவில்லை.
திமுக கூட்டணியில் உள்ள விசிக, 4 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 43 இடங்களில் போட்டியிட்ட விசிக 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். விசிக வேட்பாளர்கள் தனி சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மதிமுக மாவட்ட கவுன்சிலர்கள் 2 இடங்களையும் ஒன்றிய கவுன்சிலர்கள் 16 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/local-body-elections-results-dmk-alliance-vck-mdmk-cpi-cpm-winning-details-355089/