வியாழன், 14 அக்டோபர், 2021

தமிழ்நாட்டில் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களை முழுமையாகத் திறக்க அரசு அனுமதி


14 10 2021 தமிழ்நாட்டில் அனைத்து நாட்களிலும் கோயில்கள், Masjid-கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களையும் முழுமையாகத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து புதன்கிழமையன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

அதில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் வார இறுதி நாட்களான விடுமுறை நாட்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக வார இறுதி நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அனைத்து நாட்களிலும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து சமய வழிபாட்டு தலங்களையும் முழுமையாகத் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தளர்வுகள் வருமாறு:

  1. பண்டிகைக் காலம் வருவதால் அனைத்து கடைகள், உணவகங்கள், அடுமனைகள் போன்றவை இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  2. தனிப்பயிற்சி நிலையங்கள், தனியார், அரசு வேலை வாய்ப்பு முகாம்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  3. எல்லா மத வழிபாட்டுத் தலங்களும் எல்லா நாட்களிலும் திறக்கலாம்.

மேலும், தமிழ்நாடு அரசு நவம்பர் 1ஆம் தேதி முதல் பின்வரும் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன என்று அறிவித்துள்ளது.

  1. மாவட்ட நிர்வாகங்கள் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களை நடத்தலாம்.
  2. தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளை உரிய வழிமுறைகளுடன் நடத்தலாம்.
  3. மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவை முழுமையாக செயல்படலாம். பணியாற்றுவோர் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  4. ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  5. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேரும் இறப்புகளில் 50 பேரும் பங்கேற்கலாம்.
  6. திருவிழாக்கள், அரசியல், கலாசார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

இது மட்டுமில்லாமல், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-order-to-open-all-religious-temple-in-all-days-355603/

Related Posts: