வியாழன், 14 அக்டோபர், 2021

லக்கிம்பூருக்கு சென்ற பாஜக மூத்த தலைவர், விவசாயிகளின் வீட்டுக்கு செல்லாதது ஏன்?

 

லக்கிம்பூர் கெரியில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திட, சுமார் 10 நாள்களுக்குப் பிறகு உத்தரப் பிரதேசம் சட்டத் துறை அமைச்சர் பிரிஜேஷ் பதக் லக்கிம்பூர் சென்றுள்ளார். அங்கு சென்ற, முதல் பாஜக மூத்த தலைவர் ஆவர்.


இருப்பினும், அமைச்சர் பதக், வன்முறையில் இறந்த பாஜக நிர்வாகி சுபம் மிஸ்ரா, அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கார் ஓட்டுநர் ஹரி ஓம் மிஸ்ரா ஆகிய இருவரின் குடும்பத்தினரை மட்டும் தான் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அதே பகுதியில் உயிரிழந்த விவசாயிகள் நச்சட்டர் சிங், லவ்ப்ரீத் சிங், பாஜக நிர்வாகி ஷ்யாம் சுந்தர் நிஷாத் மற்றும் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை.கொல்லப்பட்ட மற்ற இரண்டு விவசாயிகள், குர்விந்தர் சிங் மற்றும் தில்ஜீத் சிங் பக்கத்து பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுகுறித்து அமைச்சரை தொடர்பு கொண்டு பேசிய போது, “நிஷாத் மற்றும் காஷ்யப் குடும்பங்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் வசிப்பதால், அவர்களைச் சந்திக்க முடியவில்லை. நிலைமை சீரானதும், நிச்சயம் சந்திப்பேன். இறந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்தினரையும் சந்தித்து பேசுவேன்” என்றார். அமைச்சர் பதக்கின் வருகை, இச்சம்பவத்திலிருந்து “கவனத்தை திசை திருப்பும் முயற்சி” என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர். 
பி.கே.யு தலைவர் ராகேஷ் டிகைட் பேசுகையில், “இறந்த விவசாயிகளின் குடும்பத்தினரை அமைச்சர் சந்திக்க நினைப்பதைத் தாமதிக்கலாம். அவர்களது குடும்பத்தினர் எப்படினாலும் ரியாக்ட் செய்யலாம். எனவே, அவர்களிடம் அனுமதி வாங்க வேண்டியது அவசியம்” என்றார்.
பாஜக மாவட்ட தலைவர் சுனில் சிங் கூறுகையில், “கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அமர் பால் மவுரியா தலைமையிலான குழு, நிஷாப் மற்றும் கஷ்யாப்-இன் குடும்பத்தினரை வரும் அக்டோபர் 16ஆம் தேதி நேரில் சந்திப்பார்கள்” என தெரிவித்தார்.


பாஜக அமைச்சரின் வருகை குறித்து விவசாயிகளின் குடும்பத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. நச்சட்டர் சிங் , லவ்ப்ரீத் சிங் ஆகியோரின் குடும்பங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. 
18 வயதான குர்விந்தர் சிங்கின் சகோதரர் குரு சேவக் பேசுகையில், ” அமைச்சர் அரசியல் ரீதியாக வரக்கூடாது. துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள தாராளமாக வரலாம். ஆனால், அப்படி வருகையில், கட்சிக் கொடியின்றி தான் வர வேண்டும்” என்றார். மேலும், சுபம் மிஸ்ரா மற்றும் ஹரி ஓம் மிஸ்ரா ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்து அமைச்சர் பேசியபோது, “துப்பாக்கி உரிமம், இறந்தவருக்குத் தியாகி அந்தஸ்து, இச்சம்பவத்தில் நியாயமான விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. சுய பாதுகாப்பிற்காக லைசன்ஸ் துப்பாக்கி வேண்டும் என குடும்பத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


நிஷாத் குடும்பத்தினர் கூறுகையில், ” அமைச்சர் வருகை குறித்து இதுவரை யாரும் தகவல் தெரிவிக்கவில்லை. இதுவரை எந்த அமைச்சரும் எங்களை வந்து சந்திக்கவில்லை. எங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புவோரை நிச்சயம் சந்திப்போம்” என்றனர். காஷ்யப் குடும்பத்தினரும், அமைச்சர் வருகை குறித்து யாரும் தகவல் தெரிவிக்கவில்லை என்கின்றனர்.


பிரியங்கா காந்தியுடன் லக்கிம்பூர் கெரி சென்ற காங்கிரஸ் மாநில தலைவர் அஜய் குமார் லல்லுவிடம், அமைச்சர் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அவர், “இது விசாரணையை திசைதிருப்பும் அரசின் முயற்சியாகும். இந்த அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது. சம்பவம் நடந்து 10 நாள்களுக்குப் பிறகு அவர்கள் வருவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் நோக்கம் அவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது” என்றார்.

source https://tamil.indianexpress.com/india/first-lakhimpur-visit-by-senior-bjp-leader-skips-farmer-homes-355262/

Related Posts: