Customs duty waiver on edible oil imports : புதன்கிழமை அன்று, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அரசு சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் மற்றும் சோயா எண்ணெய்களின் கச்சாப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான சுங்கவரியை, விலைவாசிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
பயன்பாடு மற்றும் இறக்குமதி
ஒவ்வொரு ஆண்டும் 20 முதல் 21 மில்லியன் டன் சமையல் எண்ணெய் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 4 முதல் 15 மில்லியன் டன் எண்ணெய்ப் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சீனாவிற்கு அடுத்து உலக அளவில் சமையல் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது பெரிய நாடு இந்தியாவாகும். பாமாயில் தான் இந்தியா முழுவதும் அதிக அளவில் (45%) பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சமையல் பண்டங்கள் உற்பத்தி தொழிற்சாலைகளில் மிட்டாய் மற்றும் நம்கீன் ஆகியவற்றை வறுக்க பயன்படுகிறது. அடுத்தபடியாக சோயாபீன் எண்ணெய் (20%) பயன்படுத்தப்படுகிறது. 10% கடகு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியுள்ளோர் அதிக அளவில் சூரியகாந்தி எண்ணெய், பருத்தி எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். கச்சா மற்றும் உணவுக்கு நேரடியாக பயன்படுத்தும் வகையில் சுத்தகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் மலேசியா, ப்ரேசில், அர்ஜெண்டினா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள காரணத்தால், இந்திய எண்ணேய் சந்தை சர்வதேச எண்ணேய் சந்தைகளின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. சோயாபீன் எண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்ற உள்நாட்டில் வளர்க்கப்படும் எண்ணெய் வித்துகள் சோல்வண்ட் மற்றும் எக்ஸ்பெல்லர் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே எண்ணெய் மற்றும் புரதம் நிறைந்த புண்ணாக்கு தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. பிந்தைய பொருள் ஏற்றுமதிக்கு உகந்ததும் கூட.
விலையும் அரசியலும்
கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது. உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் ப்ரைஸ் மானிட்டரிங் செல் சேமித்த தரவுகளின் படி, பெரும்பாலான சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டருக்கு ரூ. 130 முதல் 190 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உ.பி., பஞ்சாப், ஹிமாச்சல், கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் எண்ணெய் விலைவாசி உயர்வு என்பது எந்த அரசாங்கமும் தங்களின் வாக்காளார்களை எதிர்கொள்ளும் கடைசி விசயமாக வைத்திருக்கிறார்கள். மேலும் விழா காலங்களில் சமையல் எண்ணெய்கள் வாங்குவது அதிகரிக்கும்.
அரசு இறக்குமதிக்கான சுங்கவரி மட்டுமின்றி 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை அக்ரி செஸ் வரியையும் குறைத்துள்ளது. எண்ணெய்ப் பொருட்களின் விலையை குறைக்க எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பொருட்களின் சேமிப்பு வரம்பை மாநில அரசுகளே நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்த பிறகு இந்த செய்தி வெளியாகியுள்ளது. பிப்ரவரி மாதம் முதல் கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயின் வரிகளை குறைத்துக் கொண்டே வந்தது. விலையை கட்டுப்படுத்த ஐந்தாவது முறையாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இதுவாகும்.
நுகர்வோர்கள் எண்ணெய் விலைக்குறைப்பை உடனடியாக பார்க்க முடியாது என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Solvent Extractors Association of India அமைப்பின் தலைவர் அதுல் சதுர்வேதி அறிக்கை ஒன்றில், வரி குறைப்பின் மொத்த பலன்களையும் வாடிக்கையாளர்கள் பெறமுடியாமல் போகலாம் என்று கூறினார்.
ஒரு டன் பாமாயில் கச்சா பொருட்களுக்கான சுங்கவரியானது ரூ. 14000 ஆகும். ஆனால் அதே நேரத்தில் சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்யின் கச்சாப்பொருட்களுக்கான சுங்கவரி ஒரு டன்னுக்கு ரூ. 20 ஆயிரம். உண்மையில் இன்று சுங்கவரி நீக்கம் என்ற அறிவிப்பு வெளியான பிறகு மலேசிய சந்தைகளில் ஒரு டன் கச்சாப்பொருட்களின் விலையானது 150 முதல் 170 ஆர்.எம். வரை அதிகரித்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களில் சந்தையில் வதந்திகள் ஏற்கனவே உள்நாட்டு விலையை ஓரளவு குறைத்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை மேலும் ஒரு கிலோவுக்கு ரூ. 6 முதல் 8 வரை வரை குறையலாம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சங்கத்தின் நிர்வாக இயக்குநர் பி வி மேத்தா, சர்வதேச விலைகள் அதிகமாக இருப்பதால், விலைவாசி குறைவதற்கான வாய்ப்புகள் உடனடியாக தெரியவில்லை என்று கூறினார். இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் பனை உற்பத்தி அல்லது அர்ஜென்டினா/பிரேசிலில் சோயாபீன் அல்லது உக்ரைனில் சூரியகாந்தி எண்ணெய் கச்சாப்பொருட்களை உடனடியாக வழங்குவதற்கான வாய்ப்புகளும் குறைவாக உள்ளது. சந்தை விலைகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைகின்ற போது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் விநியோகத்தில் முன்னேற்றம் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
விவசாயிகள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
ஏற்கனவே அறுவடை ஆரம்பமான நிலையில் அல்லது தசராவிற்கு பிறகு அறுவடை செய்ய உள்ள நிலையில், அனைத்து எண்ணெய் வித்துகளின் மண்டி விலையும் இதனால் பாதிப்படையும். மகாராஷ்டிராவில் லத்தூரின் மொத்த சந்தையில் சோயாபீனின் சராசரி வர்த்தக விலை வியாழக்கிழமை ஒரு குவிண்டாலுக்கு ரூ.300 குறைந்தது. இந்த எண்ணெய் வித்து புதன்கிழமை அன்று ரூ. 5600க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பிற்கு பிறகு குவிண்டால் ஒன்று ரூ. 5300க்கு விற்பனை செய்யப்படுகிறது. குஜராத்தில் கடலைக்கான சராசரி வர்த்தக விலையிலும் குறைவு ஏற்பட்டது.
செப்டம்பர் பெய்த கனமழை காரணமாக ஏற்கனவே மகாராஷ்ட்ராவில் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களை இழந்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் நிலவிய ஈரப்பதம் காரணமாக நிலக்கடலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். நாடு முழுவதும் எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்யும் விசாயிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
கோழித் தொழிலுக்கு உதவும் வகையில் மரபணு மாற்றப்பட்ட சோயாமீல் கேக்கை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதித்ததால், சோயாபீன் விவசாயிகள் இரட்டை விவகாரங்கள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்புக்கு பிறகு நாடு முழுவதும் சோயாபீன் விலை 4,000-5,000/குவிண்டாலுக்கு மேல் குறைந்தது. தற்போதைய முடிவு தங்களின் வருவாயை மேலும் பாதிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
நீண்ட கால தாக்கங்கள்
கடந்த சில ஆண்டுகளாக, அரசு எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகளுக்காக மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை குறைக்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அடிக்கடி நிகழ்ந்த சந்தை தலையீடுகளால் விலைவாசி குறைந்தது என்று கூறும் தொழிற்துறைகள் இது அரசாங்கத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் மற்றும் எண்ணெய் வித்துக்களை வளர்ப்பதிலிருந்து விவசாயிகள் வெளியேறும் நிகழ்வை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. எண்ணெய் வித்துக்கள் அல்லது பருப்பு வகைகளை வளர்க்க விவசாயிகளுக்கு உதவ விலைகளில் தொடர்ச்சி தேவை. இல்லையெனில் உள்நாட்டு உற்பத்தி விலையில் மாற்றம் ஏற்படாது என்று லத்தூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/explained/customs-duty-waiver-on-edible-oil-imports-will-it-help-control-prices-355840/