சனி, 16 அக்டோபர், 2021

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் பெயர்: ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் அறிவிப்பு

 அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என்று பெயர் சூட்ட உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், கட்சியின் பொன்விழாவை முன்னிட்டு ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு ‘எம்ஜிஆர் மாளிகை’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படும் என்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயாலிதா ஆகியோரின் படங்களுடன் சிறப்பு லோகோ வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்

அதுமட்டுமின்றி, அதிமுகவின் வளர்ச்சிக்காக பணியாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினருக்கு இந்த ஆண்டுமுதல் சிறப்பு விருதுகள் வழங்கப்படும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஆரம்பக் கால உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்குவதோடு, அதிமுகவில் பணியாற்றிய மூத்த முன்னோடிகளுக்குச் சிறப்பு செய்யப்படும் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின்‌ பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சுப்‌ போட்டி, கவிதைப்‌ போட்டி, கட்டுரைப்‌ போட்டி, விளையாட்டுப்‌ போட்டி ஆகியவற்றை மாநிலம்‌ முழுவதும்‌ நடத்தி, அதில்‌ வெற்றி பெறுபவர்களுக்கு, அதிமுகவின்‌ சார்பில்‌ நடத்தப்படும்‌ பொன்விழா மாநாட்டில்‌ சான்றிதழும்‌, பரிசும்‌ வழங்கி சிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக‌ தொடங்கிய நாள்முதல்‌ இன்றுவரை, கழக வரலாற்றின்‌ முக்கிய நிகழ்வுகளை “மக்கள்‌ தொண்டில்‌ மகத்தான 50 ஆண்டுகள்‌” என்ற தலைப்பில்‌ குறிப்பேடாக அச்சடித்து வழங்கப்படும். மேலும், தலைமைக்‌ கழகப்‌ பேச்சாளர்கள்‌ மற்றும்‌ கலைக்‌ குழுவினரை கவுரவித்து, உதவி செய்வது, ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ அரங்கக்‌ கூட்டங்கள்‌ நடத்தி, அந்தந்த மாவட்டத்தில்‌ உள்ள ஆரம்பக்கால உறுப்பினர்களுக்குப் பொன்விழா நினைவு நாணயம்‌/ பதக்கம்‌ வழங்குவது ஆகியவை நடைபெறும். புரட்சித்‌ தலைவரைப்‌ பற்றியும்‌, ஜெயலலிதாவைப்‌ பற்றியும்‌, அதிமுக‌ பற்றியும்‌ நூல்களை எழுதியுள்ள ஆசிரியர்களை அழைத்து கவுரவப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்‌ஜிஆர்‌ மன்றங்களிலிருந்து அதிமுக‌ பணிகளைத்‌ தொடங்கிய மூத்த முன்னோடிகளுக்கு சிறப்பு செய்வது, அதிமுக‌ பொன்விழாவைப் பொதுமக்களும்‌ அறிந்துகொள்ளும்‌ வகையில்‌, காலச்‌ சுருள்‌ போன்ற வரலாற்று நிகழ்வுகளைக்‌ கொண்ட விளம்பரப்‌ படம்‌ தயாரித்து தொலைக்காட்சிகளிலும்‌, சமூக ஊடகங்களிலும்‌ ஒளிபரப்புவது ஆகியவையும் இதில் அடங்கும்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/aiadmk-headquarters-will-be-named-as-mgr-house-ops-eps-tamil-news-355914/