திங்கள், 1 நவம்பர், 2021

கே.என்.நேரு: சேலம் அதிகாரிகளுக்கு திடீர் எச்சரிக்கை

 அதிமுகவுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் விரைவில் தங்கள் போக்கை திருத்திக்கொள்ள வேண்டும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்ததன் மூலம் அனைத்து ஒன்றியங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதனால், இந்த ஆண்டு இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் என்று அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கான பொறுப்பு அமைச்சராக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக குறைவான இடங்களிலேயே வெற்றி பெற்றது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத்தில் 9 தொகுதிகளில் திமுக 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதனால், வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அனைத்து இடங்களையும் திமுக வெற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட திமுக செயலாளர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, தமிழகத்தில் ஆட்சி மாறிய பிறகும், சேலம் மாவட்டத்தில் இன்னும் சில அரசு அதிகாரிகள் அதிமுக ஆதரவு மனநிலையுடன் செயல்படுவதாக புகார் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சேலம் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “சேலம் மாவட்டத்தில் அதிமுகவுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் விரைவில் தங்கள் போக்கை திருத்திக்கொள்ள வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு, வரப்போகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசினார். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டுகளில் திமுக வெற்றிபெறப் போவது உறுதி. சேலம் மாவட்டத்தில் உள்ள சில அதிகாரிகள் இன்னும் அதிமுகவுக்கு துணைபோகும் வகையில் செயல்படுவதாக தகவல் வருகிறது. அவர்கள் விரைவில் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். ” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் உயர்ந்த பதவியை வகித்தாலும் அவர் சேலம் மாவட்டச் செயலாளர் பதவியையும் தன் வசமே வைத்துள்ளார். அவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாநகராட்சியை அதிமுக கைப்பற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்பட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் திமுக 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதற்கு பதிலடியாக அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் அமைச்சர் கே.என்.நேருவை களம் இறக்கியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால், சேலம் மாவட்டத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் அதிமுக ஆதரவு போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் அவர்களை டிரான்ஸ்ஃபர் செய்யவும் திமுக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-kn-nehru-warns-salem-district-govt-officials-and-will-change-aiadmk-support-stand/