தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் அவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்று திமுக தலைமைக்கு தெரியவந்தால் அவர்களிடம் இருந்து முக்கிய இலாக்காக்கள் பறிக்கப்படலாம் அல்லது அமைச்சர் பதவிகூட பறிக்கப்படலாம் என்று திமுக தலைமை முடிவெடுத்துள்ளதக அண்ணா அறியவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும், அமைச்சர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் தேர்தல் ஏற்பாடுகளை கண்காணிக்க தங்கள் சொந்த மாவட்டங்களில் இருந்து குழுக்களை அழைத்து வந்து முக்காமிட்டுள்ளனர்.
திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடந்தவாரம் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசும்போது, இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் யாராவது கட்சிக்குள் உள்ளடி வேலைகள் செய்து துரோகம் செய்தால் அவர்கள் 24 மணி நேரத்தில் கட்டம்கட்டப்படுவார்கள். அண்ணா காலத்தில் சம்பத், கலைஞர் காலத்தில் எம்.ஜி.ஆர், வை கோபால்சாமி என எத்தனை துரோகங்கள். இனிமேலும் துரோகங்களை பொறுத்துகொள்ள முடியாது என்று கடுமையாகப் பேசினார். அமைச்சர் துரைமுருகனின் பேச்சு திமுகவில் பலருக்கும் கடும் எச்சரிக்கையாக இருந்தது. அதே நேரத்தில், அதிமுகவினரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.
இந்த சூழ்நிலையில்தான், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள், அவரவர் பொறுப்பேற்றுள்ள மாவட்டத்தில் ஒட்டுமொத்த வெற்றியை உறுதி செய்யாவிட்டால் அவர்களுடைய அமைச்சர் பதவிகள் பறிக்கப்படும் என்று திமுக தலைமை திட்டவட்டமாக கூறியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமை சட்டமன்றத் தேர்தலுக்கு இணையாக இந்த 9 மாவட்ட ஊராக உள்ளாட்சி தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர்கள், திமுக வேட்பாளர்களை மட்டும் ஆதரித்து பிரசாரம் செய்யாமல், ஒன்பது மாவட்டங்களிலும் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிராசாரம் செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருபதுக்கும் மேற்பட்ட திமுக அமைச்சர்கள், குறிப்பாக சில பலமான அமைச்சர்கள் தங்கள் பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் எதிர்கால அரசியல் பாதுகாப்பதற்காகவும் கடந்த மூன்று வாரங்களில் 9 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டங்களுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட திமுக அமைச்சர்கள் சரியாக செயல்படவில்லை என்று தெரியவந்தால் அவர்கள் அமைச்சர் பதவி பறிக்கப்படும் அல்லது முக்கிய இலாக்கக்கள் பறிக்கப்படும் என்று திமுக தலைமை வாய்மொழியாக கூறியிருப்பதைக் கேட்டு பலரும் ஷாக் ஆகியிருக்கிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-chief-issues-will-take-action-on-ministers-if-they-do-not-work-in-local-body-polls-351795/