27 09 2022
கடந்த பத்து ஆண்டு காலத்தில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. காண்ட்ராக்ட்
விடுவது, பணம் எடுப்பது மட்டுமே அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமையில் திமுக முப்பெரும் விழா சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்பிரமணியன், ”திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்கள் பிரச்னை குறித்து
பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தியது. எதற்காக பொதுக்கூட்டம் நடைபெற்றதோ
அதற்கு தீர்வு காணும் வகையில் எல்லாவற்றையும் திமுக அரசு செய்து வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டிற்குள் 1053 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால் கட்டப்படுகிறது. சென்னை, மாநகராட்சியாக மாறி 330 ஆண்டுகளில் இதுவரை அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் 2100 கிலோ மீட்டர். ஆனால் இந்த ஓராண்டில் மட்டும் 1053 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஏற்கனவே அமைக்கப்படுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற ஆட்சி தமிழகத்தில் இதுவரை கண்டதில்லை என அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் வயிற்றெரிச்சல் காரர்கள் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் புலம்பி வருகின்றனர்” என்றார்.
பின்னர் பேசிய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மக்களுக்கு
24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க வேண்டும், அதற்காக திட்டப்பணிகளை செய்ய வேண்டும்
என தமிழக முதல்வர் உத்தரவிட்டதாக கூறினார். அனைத்து இடங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், பாதாள சாக்கடைத் திட்டம், அனைத்து இடங்களிலும் கழிவறைத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் 980 பழைய கழிவறைகளை புதிதாக மாற்ற
டெண்டர் விடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் வருங்காலத்தில் சென்னை மாநகரத்தில் அனைத்து மக்களும் அனைத்து வசதியும் பெறும் வகையில் தனி நிதி ஒதுக்கியுள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை வேளான் துறைக்கு 34 ஆயிரம் கோடி ஒதுக்கியதை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. நான்
முதன்முதலாக அமைச்சரானபோது தமிழகத்தின் பட்ஜெட்டே வெரும் 50 ஆயிரம்
கோடிதான் என்றார்.
மேலும், கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக எதுவும் செய்யவில்லை. அவர்கள் ஆட்சியில் காண்ட்ராக்ட் விடுவது, பணம் எடுப்பது மட்டுமே நடைபெற்றது என்று குற்றம்சாட்டினார்.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு இந்தாண்டு மட்டும் 1400 கோடி ரூபாய் கூடுதலாக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் பேருந்து நிலையம், மார்க்கெட், உள்ளாட்சிகளுக்கு வருமானம் இல்லா கடைகள் என்று இந்த துறைமீது தனி கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறினார்.
source https://news7tamil.live/they-have-done-nothing-in-the-last-10-years-minister-kn-nehru-accused.html