கோவையில் இரண்டு அரசுப் பேருந்துகள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுளது. அரசுப் பேருந்துகள் மீது கல் வீசி தாக்கிய இளைஞர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை மாநகரப் பகுதியில் அரசு சொகுசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை டவுன் ஹால் பகுதியில் இருந்து உக்கடம் செல்வதற்காக 21 ஏ என்ற அரசு சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நாஸ் தியேட்டர் அருகே பேருந்தை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் பேருந்தின் பின்பகுதியில் கல் வீசி தாக்கினர். இதில் பேருந்தின் பின் பகுதியில் உள்ள கண்ணாடி உடைந்தது. இதையடுத்து நடத்துனர் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, புட்டுவிக்கி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கணபதி – கோவைபுதூர் செல்லும் 3 டி, பேருந்தின் மீதும் அடையாளம் தெரியாத இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றனர். இதனால், பேருந்தில் முன் பகுதியில் கண்ணாடி உடைந்தது. இதை தொடர்ந்து நடத்துனர் போக்குவரத்து கழகத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இப்படி கோவையில் நடந்த பேருந்தின் மீதான தாக்குதல் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்