23 09 2022
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை (செப்.22) சோதனைகள் நடத்தினர்.
இதில் பல்வேறு நபர்கள் மீது 1967 சட்டவிரோத தடுப்புச் சட்டம் (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் குறித்து பார்க்கலாம்.
பி.எஃப்.ஐ., நிர்வாகிகள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இதற்காக வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெற்றதாகவும் ஏப்ரலில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையில் சென்ற வியாழக்கிழமை நாடு முழுவதும் 93 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ. செப்டம்பர் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் வாரண்ட்-ஐ பெற்றது. தொடர்ந்து, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மேற்கு வங்காளம், பீகார் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் கேரளத்தையும், 11 பேர் தமிழ்நாட்டையும், 7 பேர் கர்நாடகத்தையும், 4 பேர் ஆந்திராவையும், 2 பேர் ராஜஸ்தானையும், தலா ஒருவர் உத்தரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இவர்கள் மீது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருத்தல், ஆள் சேர்த்தல் மற்றும் நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
இவர்கள் இந்தியாவில் உள்ள அனுதாபிகள், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் கூட்டாளிகளின் வங்கிக் கணக்குகளை இந்த சட்டவிரோத பண பரிமாற்றத்துக்கு பயன்படுத்தியுள்ளனர்.
இந்தப் பணம் மீண்டும் பி.எஃப்.ஐ. வங்கிக் கணக்குகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்றால் என்ன?
கேரளாவில் தேசிய ஜனநாயக முன்னணி, கண்ணியத்திற்கான கர்நாடகா மன்றம் மற்றும் தமிழ்நாட்டில் மனித நீதி பாசறை ஆகிய தென்னிந்தியாவில் உள்ள மூன்று முஸ்லீம் அமைப்புகளின் இணைப்பின் மூலம் 2007 இல் PFI உருவாக்கப்பட்டது.
முன்னதாக நவம்பர் 2006 இல் கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்த கூட்டத்தில் மூன்று அமைப்புகளையும் ஒன்றாகக் கொண்டுவருவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
தொடர்ந்து, பிப்ரவரி 16, 2007 பெங்களூருவில் “எம்பவர் இந்தியா மாநாடு” பேரணியில் PFI அமைப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கான பிரச்னைகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2009இல், சமூக ஜனநாயகக் கட்சி ஆஃப் இந்தியா (SDPI) என்ற அரசியல் அமைப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் இருந்து உருவானது.
PFI தொடர்புடைய சில முக்கிய வன்முறை வழக்குகள் எவை?
- கேரளாவில் 2011ஆம் ஆண்டு ஒரு கல்லூரிப் பேராசிரியரின் கை வெட்டப்பட்ட வழக்கு.
- 2016இல் பெங்களூருவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஆர்.ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டதில், பி.எஃப்.ஐ-யின் பெங்களூரு பிரிவின் தலைவரான அசிம் ஷெரீப்பை என்ஐஏ குற்றவாளியாகக் குறிப்பிட்டது.
- 2016 ஆம் ஆண்டில், பஜ்ரங் தள் தொண்டர் கே ராஜுவைக் கொலை செய்ததற்காக, மைசூரு போலீஸார் பிஎஃப்ஐ தொடர்புகளைக் கொண்ட அபித் பாஷா என்ற இளைஞரைக் கைது செய்தனர். இப்பகுதியில் நடந்த ஆறு வகுப்புவாத தூண்டுதல் கொலைகளில் ஈடுபட்டதாக பாஷா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
- 2017இல் தட்சின கன்னடாவில் உள்ள பன்ட்வால் பகுதியில் 28 வயதான ஆர்எஸ்எஸ் தொண்டர் சரத் மடிவாலா கொல்லப்பட்ட வழக்கில் எஸ்டிபிஐ நிர்வாகி அஷ்ரஃப் கலாய் கைது செய்யப்பட்டார்.
- 2019இல் நரசிம்ஹராஜா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ, தன்வீர் சயீத்-ஐ கொல்ல முயன்ற வழக்கில் எஸ்டிபிஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
- 2019இல் தஞ்சாவூரில் சமூக ஆர்வலர் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கிடையில் பி.எஃப்.ஐ., மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகிகள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆசிரியர்களுக்கு மிரட்டல், பிற மதங்களை அவமதித்தல், பயங்கரவாத அமைப்புடன் கைகோர்த்து கொலை குற்றங்களில் ஈடுபடுவது, வெடிகுண்டு மிரட்டல் என பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு தழுவிய ரெய்டுகளுக்கு SDPIயின் எதிர்வினை என்ன?
அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தனது எதிர்பாளர்களை அடக்க பாரதிய ஜனதா அரசாங்கம் முயற்சிக்கிறது என எஸ்டிபிஐ குற்றஞ்சாட்டியது.
இது குறித்து வியாழக்கிழமை அக்கட்சியின் தலைவர் எம்.கே.ஃபைசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர்களின் வீடுகளில் நாடு தழுவிய சோதனைகள் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குவதற்கான முயற்சிகளின் உறுதியான அறிகுறியாகும்.
கடந்த சில ஆண்டுகளாக, நாட்டில் நடக்கும் பாசிச அட்டூழியங்களைப் பற்றி பிரதான அரசியல் கட்சிகள் வாய்மூடி மௌனமாகிவிட்ட நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவும்தான் எதிர்க்கட்சியின் பாத்திரத்தை ஏற்றுள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், “இந்த அமைப்புகளின் மீது இடைவிடாத குற்றச்சாட்டுகள் மற்றும் சோதனைகள் இருந்தபோதிலும், தேச விரோத நடவடிக்கைகள் அல்லது நிதி முறைகேடுகளின் எந்தவொரு குற்றத்தையும் நிரூபிக்க மத்திய அரசு தவறிவிட்டது” எனவும் கூறப்பட்டிருந்தது
source https://tamil.indianexpress.com/explained/crackdown-on-pfi-what-is-the-islamic-group-accused-of-and-what-has-nia-said-so-far-515291/