திங்கள், 26 செப்டம்பர், 2022

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண் கொலை: ... பிரமுகர் மகன் கைது

 

25 09 2022

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண் கொலை: பாஜக பிரமுகர் மகன் கைது

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் வினோத் ஆர்யா, முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகன் புல்கித் ஆர்யா. லக்ஷ்மன் ஜூலா என்ற பகுதியில் வனந்த்ரா என்ற பெயரில் ரிசார்ட் ஒன்றை நடத்தி வந்தார். இந்த ரிசார்ட்டில் 19 வயதான அங்கிதா பண்டாரி என்ற பெண் வரவேற்பாளராக வேலை செய்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக அங்கிதா, படிப்பை தொடராமல் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்த அங்கிதா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புல்கித்தின் ரிசார்ட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர் ரிசார்ட்டிற்கு வேலைக்குச் சென்ற அங்கிதா, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் முதலில் புகாரை விசாரிக்காமல் இருந்ததாக தெரிகிறது. தொடர் அழுத்ததின் காரணமாக பின் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கால்வாய் ஒன்றில் இருந்து அன்கிதா பண்டாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதன்பேரில் காவல்துறையினர் ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா மற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பிறகு புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றொரு ஊழியர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தன்று ஆர்யாவிற்கும், அங்கிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரத்தில் அங்கிதாவை கால்வாயில் தள்ளிவிட்டதாக ஆர்யா ஒப்புக்கொண்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையினர் கூறினர்.

தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார், ரிசார்ட்டிற்கு வரும் முக்கிய நபர்களிடம் அங்கிதா நெருக்கி பழக வேண்டும் என ஆர்யா வற்புறுத்தி உள்ளார். இதை அங்கிதா ஏற்க மறுத்துள்ளார். இதன் காரணமாக சம்பவதன்று அங்கிதாவிற்கும், ஆர்யாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆர்யா அங்கிதாவை கால்வாயில் தள்ளி கொலை செய்ததாக கூறப்படுகிறது என்றார்.

இந்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக குற்றஞ்சாட்டினர். இது அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியது. இந்சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் புஷ்கர் தாமி உத்தரவிட்ட நிலையில், ரிசார்டை இடிக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் உத்தரவின் பேரில் பாஜக பிரமுகர் மகனுக்கு சொந்தமான ரிசார்ட் இடித்து அகற்றப்பட்டது.


source https://tamil.indianexpress.com/india/uttarakhand-receptionists-murder-bjp-former-state-minister-son-arrested-515820/